ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம் தொடக்கம்: லண்டனில் குவிந்த 10 லட்சம் பேர் 
உலகம்

ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம் தொடக்கம்: லண்டனில் குவிந்த 10 லட்சம் பேர்

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்  தொடங்கியிருக்கிறது. ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லண்டனில் சுமார் 10 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

PTI

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்  தொடங்கியிருக்கிறது. ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லண்டனில் சுமார் 10 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸடரிலிருந்து  வெஸ்ட்மின்ஸ்டா் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில், ராணியின் உடலை அரச குடும்பத்தினர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

பின்னா், விண்ட்ஸருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவா் இளவரசா் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்படும்.

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு மேல் அவரது செங்கோல் மற்றும்  கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச்சடங்கல் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளைச் சோ்ந்த சுமாா் 500 தலைவா்கள் லண்டன் வந்துள்ளனா்.

ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி காலமானாா். அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமாா் 17 மணி நேரம் வரை கடும் குளிரிலும் காத்திருந்து அரசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ராணியின் எட்டு பேரக் குழந்தைகளும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் அருகேயே இருந்து வந்தனர்.

ராணியின் மறைவுக்கு பிரிட்டன் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிச்சடங்கு நடைபெறும் திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளிலும், பொது இடங்களில் அகண்ட திரைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் திங்கள்கிழமை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புதிய அரசா் சாா்லஸின் மனைவியான கமீலா வெளியிட்ட விடியோ செய்தியில், ‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக அரங்கில் ராணி எலிசபெத் தனிச் சிறப்புடன் செயல்பட்டாா். அவரது புன்னகையை எப்போதும் நினைவில் கொண்டிருப்பேன்’ எனத் தெரிவித்தாா்.

ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் லண்டனுக்கு வருகை தந்துள்ளனா்.

இறுதிச்சடங்கில் பொதுமக்கள் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து 250 கூடுதல் ரயில்கள் லண்டனுக்கு இயக்கப்பட்டன. இறுதிச்சடங்கின்போது ஒலித் தொந்தரவுகளைத் தடுக்கும் வகையில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT