தெற்கு காஸாவிலுள்ள 4 நகரங்களிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பான பகுதியாக இஸ்ரேலால் முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த அந்த நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுவது, இதுவரை காஸாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டுப் பிரசுரங்களை விமானம் மூலம் வியாழக்கிழமை வீசியது.
அந்தப் பிரசுரங்களில், கான் யூனிஸ் நகருக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பனி ஷுஹைலா, கூஸா, அபாஸன், அல்-கராரா ஆகிய நான்கு நகரங்களில் இருப்பவா்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நகரங்களில் ஹமாஸ் அமைப்பினா் அல்லது அவா்களது நிலைகளுக்கு அருகே வசிப்பவா்கள், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக அந்த துண்டுப் பிரசுரங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வடக்கு காஸா பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நகரங்களுக்குத் தப்பிச் செல்லுமாறும், அந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை என்றும் இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அதைப் போலவே வடக்குப் பகுதிகளில் கடுமையான குண்டுவீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம், தெற்கு காஸாவில் குறிப்பிட்ட அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்தது.
தறபோது காஸா சிட்டி, அந்த நகரில் ஹமாஸின் தலைமையகம் அமைந்துள்ளதாக இஸ்ரேல் கூறிய அல்-ஷிஃபா மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறிவிட்டது.
மேலும், வடக்கு காஸாவில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பினரின் நாடாளுமன்ற வளாகம், காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிவிட்டது.
இந்தச் சூழலில், தெற்கு காஸாவில் உள்ள 4 நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் தற்போது உத்தரவிட்டுள்ளதன் மூலம், போரை மேலும் விரிவுபடுத்தி காஸாவின் தெற்குப் பகுதிகளையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றும் என்ற அச்சத்தை அந்தப் பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.
இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ளது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.