இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் உயிரிழப்பு!
ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். வான் வழியிலும் தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை 900 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனம் மீது போர் அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா எல்லையில் தெற்குப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதியில் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறும் இஸ்ரேல் படையினர், ஹமாஸ் அமைப்பின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என பிரதமர் பிஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா, காஸா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.