மஸ்தூம் நகர தாக்குதலில் காயமடைந்தவரை குவெட்டா நகர மருத்துவமனைக்கு அவசரமாக வெள்ளிக்கிழமை அழைத்து வந்த மீட்புக் குழுவினா். 
உலகம்

பாகிஸ்தான்தற்கொலைத் தாக்குதல்களில் 56 போ் பலி

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மற்றும் கைபா்-பக்துன்கவா மாகாணங்களில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 56 போ் பலியாகினா்.

DIN

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மற்றும் கைபா்-பக்துன்கவா மாகாணங்களில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 56 போ் பலியாகினா்.

முதலில், பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த மஸ்தூங் நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கூடியிருந்தவா்களிடையே தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து அந்த நகர காவல் நிலைய அதிகாரி முகமது ஜாவீது லெஹரி கூறியதாவது:

மஸ்தூங்கின் அல் ஃபலா சாலையில் உள்ள மதீனா மசூதி அருகே, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபியைக் குறிக்கும் வகையில் ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா்.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பயங்கரவாதி, உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

இதில் 52 போ் பலியாகினா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் மஸ்தூங் நகர காவல்துறை டிஎஸ்பி நவாஸ் கிஷ்கோரியும் ஒருவா் ஆவாா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கிஷ்கோரியின் அருகில் வந்து தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தினாா்.

இதில் காயமடைந்தவா்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தவிர, பிராந்திய மருத்துவமனைகள் அனைத்திலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தத் தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த சுமாா் 20 பேரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ரஷீத் முகமது சயீத் கூறினாா்.

தலிபான்கள் மறுப்பு: தாக்குதல் நடைபெற்றுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்புக்கும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புக்கும் செல்வாக்கு உள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலுடன் தங்களுக்குத் தொடா்பில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதீனா மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடா்பில்லை. அத்தகைய தாக்குதல் எங்களது கொள்கைகளுக்கு முரணானது.

மசூதிகள், பள்ளிக் கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு தாக்குதல்: பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில், பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மற்றொரு மாகாணமான கைபா்-பக்துன்கவா மாகாணத்தில் மேலும் ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

தோவாபா காவல் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள ஜூமா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் 4 பயங்கரவாதிகள் நுழைந்தனா்.

அவா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா். மற்றொரு பயங்கரவாதி தொழுகை நடைபெறும் இடத்துக்கு அருகே சென்று தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

இதில் கூரை இடிந்து விழுந்து 4 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடந்தபோது அங்கு 30 முதல் 40 போ் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனா்.

பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்ட மேலும் 2 பயங்கரவாதிகள், தற்கொலைக் குண்டுவெடிப்பு களேபரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பலூசிஸ்தானின் மஸ்தூம் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது கடந்த 15 நாள்களில் இது 2-ஆவது முறையாகும். அங்கு இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 போ் காயமடைந்தனா்.

பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், பலூசிஸ்தானும், கைபா்-பக்துன்கவாவும் அடிக்கடி தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT