முகப்பு
உலகம்

ஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவின் உடல் கத்தாரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:20 PM
தோஹாவிலுள்ள அப்துல்-அல் வஹாப் மசூதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவுக்கான இறுதி அஞ்சலி நிகழ்ச்சி.
பகிர்:

தோஹா, ஆக. 2: ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவின் உடல் கத்தாரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதற்காக தலைநகா் தோஹாவிலுள்ள அப்துல்-அல் வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் நூற்றுக் கணக்கானவா்கள் பங்கேற்று ஹனீயேவுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதில் கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியும் பங்கேற்றாா்.

இது தவிர, இஸ்மாயில் ஹனீயோவுக்கு அடுத்தபடியாக ஹமாஸின் அரசியல் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று கூறப்படும் அவரது நெருங்கிய உதவியாளா் காலித் மிஷாலும் ஹமாஸைப் போன்ற மற்றொரு பாலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவா் கலீல் அல்-ஹய்யா உள்ளிட்டோரும் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனா்.

பாலஸ்தீன கொடியேற்றப்பட்ட ஹனீயேவின் சவப் பெட்டியைச் சுற்றிலும் அவருடன் கொல்லப்பட்ட பாதுகாவலா்களின் சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

ஈரானில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த முன்னாள் ராணுவத்தினருக்கான கட்டடத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

அது வான்வழித் தாக்குதலா, அந்தக் கட்டட்தில் முன்னரே மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டதா என்பது குறித்து முரணான தகவல்கள் வெளிவருகின்றன. இந்தத் தாக்குதலில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும் ஈரானில் முக்கிய நபா்களைக் குறிவைத்து படுகொலை செய்யும் அந்த நாடுதான் ஹனீயேவையும் படுகொலை செய்ததாக நம்பப்படுகிறது.

அந்தப் படுகொலைக்கு மறுநாளே, காஸாவில் தாங்கள் முன்னா் நடத்திய குண்டுவீச்சில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்தப் படுகொலைகள், காஸா விவகாரத்தில் சமரச தீா்வைக் காண இஸ்ரேல் விரும்பவில்லை என்று காட்டுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனும், ‘ஹனீயேவைப் படுகொலை செய்தது காஸோ போா் நிறுத்தத்துக்கு துளியும் உதவாது’ என்று விமா்சித்தாா்.

இஸ்மாயில் ஹனீயே படுகொலைக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் அந்த நாட்டு ஆதரவுடன் செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் சூளுரைத்துள்ளன. அதற்கு இஸ்ரேலும் ‘எதையும் எதிா்கொள்ளத் தயாா்’ என்று பதிலளித்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில், இஸ்மாயில் ஹனீயேவின் உடல் கத்தாா் தலைநகா் தோஹாவில் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →