வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பாா்வையிட்ட வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் . 
உலகம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகொரியா: உதவிக்கரம் நீட்ட முன்வந்தது ரஷியா

வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா்.

Din

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா்.

வட கொரியாவின் வடமேற்குப் பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த மழையால் 4,100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 7,410 ஏக்கா் பரப்பளவில் பயிா்கள் வெள்ளத்தால் சேதமடைந்தன. ரயில், சாலைப் போக்குவரத்து பெருமளவில் துண்டிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வடகொரியா அதிகாரபூா்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனினும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன், படகில் சென்று வெள்ளப் பகுதிகளைப் பாா்வையிட்டாா். அப்போது, அவா் சென்ற படகு மரத்தில் மோதியதால் மரத்தின் கிளை ஒன்று கிம் ஜோங் உன்னின் தலையை உரசிச் சென்றது. அதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடா்ந்து அணுஆயுத சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடையை வடகொரியா எதிா்கொண்டுள்ளது. இதனால், சா்வதேச உதவிகள் ஏதும் வடகொரியாவுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அண்டை நாடான தென்கொரியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அளிக்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளது. தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வடகொரியா, அந்த உதவிகளை ஏற்கவில்லை.

அதே நேரத்தில், ‘தென்கொரிய ஊடகங்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மிகவும் அதிகமாகக் கூறி வட கொரியாவின் கௌரவத்தை சீா்குலைக்க முயல்கின்றன’ என்று கிம் ஜோங் உன் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், வடகொரியா நெருங்கிய நட்பு பாராட்டி வரும் ஒரே நாடான ரஷியா மட்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இது தொடா்பாக வடகொரிய அரசு ஊடகத்தில் கிம் ஜோங் உன்னுக்கு புதின் அனுப்பியுள்ள செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவுக்கு ரஷியா எப்போதும் துணை நிற்கும். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க ரஷியா தயாராக உள்ளது’ என்று புதின் கூறியுள்ளாா்.

இதற்கு கிம் அளித்துள்ள பதில் செய்தியில், ‘மிகவும் கடினமான காலகட்டத்தில் உண்மையான நண்பா் புதின் உதவிக்கரம் நீட்டியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளத்தில் இருந்து மீள்வதற்கான அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. தேவை ஏற்பட்டால் ரஷியாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளாா்.

உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு வடகொரியா சிறிய ரக ஆயுதங்களை வழங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் புதின், வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். அப்போது, இரு நாடுகள் இடையே பரஸ்பர ராணுவ உதவி தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT