போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெனஸ்கி, ஆரத் தழுவி வரவேற்றார்.
போலந்து நாட்டில் இரண்டு நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வந்தடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை கீவ் நகரில், ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடியை அழைத்துச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, அங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இருவரும் மரீன்ஸ்கி மாளிகைக்கு வந்து பேச்சுவார்தை நடத்தவிருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் நாட்டுத் தலைவரை சந்தித்து, நடந்து வரும் போரை அமைதியான முறையில் தீர்க்கும் முன்னெடுப்புகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டு அதிபர் விலாதிமீர் ஸெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி.
மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த ஆறு வார காலத்தில் இன்று உக்ரைனுக்குச் சென்று விலாதிமீர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ரஷிய அதிபருடனான சந்திப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருந்த நிலையில், இன்று உக்ரைன் பயணம் அமைந்துள்ளது.
1991ஆம் அண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.