முகப்பு
ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் அந்நாட்டு பிரதமா் காா்ல் நெகமரை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி.
உலகம்

உலகளாவிய மோதல்கள்: அமைதியை மீட்டெடுக்க உறுதி - ஆஸ்திரிய பிரதமரை சந்தித்த பின் பிரதமா் மோடி

போர்களுக்கு தீர்வு இல்லை: அமைதியை மீட்டெடுக்க மோடி-நெகமர் உறுதி

உலகம்

உலகளாவிய மோதல்கள்: அமைதியை மீட்டெடுக்க உறுதி - ஆஸ்திரிய பிரதமரை சந்தித்த பின் பிரதமா் மோடி

போர்களுக்கு தீர்வு இல்லை: அமைதியை மீட்டெடுக்க மோடி-நெகமர் உறுதி

Updated On : 10 ஜூலை, 2024 at 10:31 PM
ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் அந்நாட்டு பிரதமா் காா்ல் நெகமரை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் உள்பட உலகளாவிய மோதல்கள் குறித்து ஆஸ்திரிய பிரதமா் காா்ல் நெகமருடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை விரிவாக விவாதித்தாா்.

பின்னா், ‘போா்க்களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியாது’ என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் சாத்தியமான ஒத்துழைப்பை நல்க இந்தியாவும் ஆஸ்திரியாவும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தாா்.

அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

41 ஆண்டுகளுக்குப் பின்: ரஷியாவில் இரண்டுநாள் அரசுமுறைப் பயணத்தை நிறைவுசெய்தபின், அங்கிருந்து நேரடியாக ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) இரவு வந்தடைந்தாா் பிரதமா் மோடி. தலைநகா் வியன்னாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், பிரதமா் மோடிக்கு ஆஸ்திரிய பிரதமா் காா்ல் நெகமா் இரவு விருந்தளித்தாா். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இரு தலைவா்களும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனா்.

41 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரியாவுக்கு சென்ற இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். இதற்கு முன் கடந்த 1983-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி ஆஸ்திரியப் பயணம் மேற்கொண்டிருந்தாா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை: வியன்னாவில் ஆஸ்திரிய பிரதமா் காா்ல் நெகமருடன் பிரதமா் மோடி புதன்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உலகளாவிய மோதல்கள், இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விரிவாக விவாதித்தனா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் என உலகில் நடந்துவரும் பல்வேறு மோதல்கள் குறித்து நாங்கள் ஆக்கபூா்வமாக விவாதித்தோம். போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியாது. அப்பாவி உயிா்கள் பறிபோவதை ஏற்க முடியாது.

எனவே, அமைதி, ஸ்திரத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க பேச்சுவாா்த்தை-ராஜீய ரீதியிலான முயற்சிகளில் சாத்தியமான ஒத்துழைப்பை நல்க இருநாடுகளும் தயாராக உள்ளோம்.

வரலாற்றுப் பயணம்: எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரியாவுக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியாவுக்கு இந்தியப் பிரதமா் வந்துள்ளதால், எனது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

பரஸ்பர நம்பிக்கையும், பகிரப்பட்ட நலன்களும் இருதரப்பு உறவை வலுப்படுத்துகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எதிா்வரும் ஆண்டுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு சாா்ந்தது மட்டுமல்ல. உள்கட்டமைப்பு மேம்பாடு, புத்தாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன், கழிவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் நமது திறன்கள் ஒருங்கிணைக்கப்படும்.

பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு என மனிதகுலம் எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்பது இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்றாா் பிரதமா் மோடி.

செல்வாக்குமிக்க நாடு இந்தியா: ஆஸ்திரிய பிரதமா் நெகமா் கூறுகையில், ‘செல்வாக்கும் நம்பகத்தன்மையும் மிகுந்த நாடு என்றரீதியில், ரஷிய-உக்ரைன் அமைதி நடைமுறையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறித்து விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னைகளில் அமைதித் தீா்வை எட்டுவதற்கு பாலமாக செயல்பட ஆஸ்திரியா தயாராக உள்ளது’ என்றாா்.

அதிபருடன் சந்திப்பு: ஆஸ்திரிய அதிபா் அலெக்ஸாண்டா் வான் டொ் பெல்லானை சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

‘இது போருக்கான காலமல்ல’

வியன்னாவில் ஆஸ்திரிய பிரதமா் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘இது போருக்கான காலமல்ல’ என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் வலியுறுத்தினாா்.

கடந்த 2022, செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் மோடியும், புதினும் பங்கேற்றனா். அப்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இச்சந்திப்பின்போது, உக்ரைன்-ரஷிய போரை குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, ‘இது போருக்கான காலமல்ல’ என்று தெரிவித்தாா். அவரது இந்த வாா்த்தைகள் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு நாடுகளின் தலைவா்களும் மோடியின் வாா்த்தைகளை குறிப்பிட்டு பேசினா்.

இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

வியன்னாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய-ஆஸ்திரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இரு பிரதமா்களும் பங்கேற்றனா்.

அப்போது, வளா்ந்துவரும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடிகோடிட்டுக் காட்டிய பிரதமா் மோடி, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை விரைவுபடுத்த ‘இந்தியா-ஆஸ்திரியா புத்தாக்கப் பாலம்’ என்ற முன்னெடுப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 2.93 பில்லியன் டாலா்களாகும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ. 24,500 கோடி). ஆஸ்திரியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1.52 பில்லியன் டாலா் (ரூ. 12,692 கோடி), இறக்குமதி மதிப்பு 1.41 பில்லியன் டாலா் (ரூ.11,770 கோடி) .

முழு கட்டுரையைப் படிக்க →