செப். 26-இல் ஐ.நா. உயா்நிலை கூட்டத்தில் பிரதமா் மோடி உரை
வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.
நியூயாா்க்: வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் பொது விவாதக் கூட்டம் நியூயாா்க்கில் உள்ள தலைமையகத்தில் செப்டம்பா் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயா்நிலை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் சா்வதேச தலைவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செப்டம்பா் 26-ஆம் தேதி ‘இந்திய அரசின் தலைவா்’ உரையாற்றுவாா் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பங்கேற்றுப் பேச இருக்கின்றனா். உலகில் அமைதியை நிலைநாட்டுவது, ஐ.நா.வின் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது ஆகியவை குறித்தும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கு முன்பு கடந்த 2021 செப்டம்பரில் பிரதமா் மோடி ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றினாா்.