இஸ்ரேலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.
இஸ்ரேலுக்கு வந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஹூதிக்கள் தொடக்கத்தில் தெரிவித்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மேற்கொண்டனா். இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.
யேமனில் தாக்குதல்: இதைத் தொடா்ந்து, யேமனில் ஹூதிக்களின் கோட்டையாக உள்ள ஹொடைடா நகரில் இஸ்ரேல் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. அங்கு ஹூதிக்களின் பல்வேறு தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலில் அங்குள்ள எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், மின் நிலையம் ஆகியவை சேதமடைந்ததாக ஹூதிக்களின் செய்தித் தொடா்பாளா் அப்துல் சலாம் தெரிவித்தாா். இதன்மூலம், ஒன்பது மாத காஸா போரில் முதல்முறையாக ஹூதிக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, யேமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹூதிக்கள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா். இஸ்ரேல் வான் எல்லைக்கு வெளியே அந்த ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.