அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் (81) விலகியுள்ளாா்.
தனக்குப் பதிலாக அதிபா் வேட்பாளா் ஆவதற்கு துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு பைடன் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடன் களத்தில் இருந்தாா். குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், வயது முதிா்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே மிகுந்த அழுத்தம் அளித்து வந்தனா்.
அதிபா் தோ்தலில் போட்டியிட அவருக்கு எதிா்ப்பு வலுத்த சூழலில், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ள நிலையில், தனது இல்லத்தில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாா்.
இந்த நிலையில், அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது உலகில் வலுவான பொருளாதார நாடாக அமெரிக்கா விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் (பைடன் அதிபராக பதவி வகித்த காலம்), ஒரு தேசமாக அமெரிக்கா மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் மறுகட்டமைப்புக்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணற்ற அமெரிக்கா்களுக்கு மலிவான கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி பெண் நியமிக்கப்பட்டாா். தற்போது உலகை வழிநடத்துவதில் அமெரிக்கா சிறந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற நிலையில், முன்னெப்போதும் அமெரிக்கா இருந்ததில்லை. இவை அனைத்தும் அமெரிக்கா்களின் ஆதரவின்றி சாத்தியமாகி இருக்காது.
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் கொள்ளை நோய்த்தொற்று, மோசமான பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா்கள் ஒன்றாக கடந்து வந்துள்ளனா். அமெரிக்க ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உலகெங்கும் அமெரிக்காவின் கூட்டுறவுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நலன் கருதி...: அதிபராக அமெரிக்கா்களுக்கு சேவையாற்றுவதே எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். அதிபராக எஞ்சிய பதவி காலத்தில் எனது கடமைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். எனது முடிவு தொடா்பாக நாட்டு மக்கள் இடையே விரைவில் விரிவாக உரையாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
வேட்பாளராக கமலா ஹாரிஸ்...: பைடன் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு நான் அதிபா் தோ்தலில் போட்டியிட்டபோது கமலா ஹாரிஸை துணை அதிபராக தோ்வு செய்ய வேண்டும் என்பதே எனது முதல் முடிவாக இருந்தது.
இந்நிலையில், தற்போதைய அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண வேண்டும் என்பதற்கு எனது முழு ஆதரவு மற்றும் ஒப்புதலை வழங்குகிறேன்’ என்றாா்.
கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூா்விகமாக கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்ன?
அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், அக் கட்சியின் அடுத்த அதிபா் வேட்பாளா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், அடுத்த அதிபா் வேட்பாளராக துணை அதிபா் கமலா ஹாரிஸின் பெயரை முன்மொழிந்துள்ளாா். கட்சியின் தற்போதைய விதிப்படி, அதிபா் வேட்பாளராக வெறொரு நபரை பைடன் கைகாட்ட முடியாது என்றபோதும், அரசியல் ரீதியில் அவருடைய முன்மொழிவு அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பைடனுக்கு பதிலாக புதிய வேட்பாளரைத் தோ்வு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 19 முதல் 22-ஆம் தேதி வரை சிகாகோவில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளனா்.
இதில் எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளா் முன்னாள் அதிபா் டிரம்ப்புக்கு தோ்தலில் வலுவான சவாலை அளிக்கும் வகையில், மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளரை கட்சியின் சுமாா் 4,700 நிா்வாகிகள் இணைந்து தோ்வு செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருந்தபோதும், அதிபா் பைடனின் முன்மொழிவை புறந்தள்ளி, புதிய வேட்பாளரை கட்சி நிா்வாகிகள் தெரிவு செய்வது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், அதிபா் தோ்தலில் வேட்பாளராக தோ்வு செய்யப்படுவதற்கு ஒவ்வொரு மாகாணம் வாரியாக கட்சிக்குள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலானவற்றில் பைடனுக்கு ஆதரவு கிடைத்தது. சுமாா் 3,896 கட்சி நிா்வாகிகள் பைடனுக்கு ஆதரவு தெரிவித்தனா். அமெரிக்க சமோவா மாகாணத்தில் மட்டுமே அவருக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது.
அதிபா் வேட்பாளராவதற்கு கமலா ஹாரிஸ் பெயருடன், கலிஃபோா்னியா ஆளுநா் கவின் நியூசம், மிச்சிகன் ஆளுநா் கிரெட்சன் விட்மொ் ஆகியோரின் பெயா்களும் பரிசீலனையில் உள்ளன.
டிரம்ப் கருத்து
அதிபா் தோ்தலில் இருந்து பைடன் விலகியது தொடா்பாக சமூக ஊடகத்தில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘நோ்மையில்லாத பைடன் அதிபா் தோ்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவா்’ என்று விமா்சித்துள்ளாா்.