அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகிய பிறகு, முதல்முறையாக பிரசாரத்தில் பங்கேற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அவரின் பெயரை கமாலா ஹாரிஸ் என்று தவறாக உச்சரித்த டிரம்ப், அவரை இடதுசாரி பைத்தியம், மார்க்சியவாதி, தீவிர இடதுசாரி, தீவிர தாராளவாதி என்று கடுமையாக சாடினார்.
கடந்த திங்கள்கிழமை அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன், கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வட கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், 100 நிமிடங்களில் 45 முறை கமலா ஹாரிஸின் பெயரை உச்சரித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது:
“கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பைடன் ஏற்படுத்திய பேரழிவின் பின்னனியில் உந்து சக்தியாக கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். அவர் ஒரு இடதுசாரி பைத்தியம். அவர் அதிபரானால் நாட்டை அழித்துவிடுவார். அதனை நாங்கள் நடக்கவிட மாட்டோம்.
அமெரிக்க வரலாற்றில் தீவிர தாராளவாத மனப்பான்மை கொண்ட அரசியல்வாதி கமலா ஹாரிஸ். அவர் பயங்கரமானவர். பெர்னி சாண்டர்ஸைவிட தாராளவாதி.
கொடூரமான அதிபரால் நியமிக்கப்பட்டவர் கமலா ஹாரிஸ். ஜோ பைடன் அதிபராகி மூன்றரை ஆண்டுகளில் இந்த நாட்டுக்காக என்ன செய்தார். நினைத்துப் பார்க்க முடியாத பலவற்றை அவர் செய்துள்ளார், அவற்றையெல்லாம் நாங்கள் மாற்றப் போகிறோம்.
ஜோ பைடனின் மனநிலை குறித்து கமலா ஹாரிஸ் துணிச்சலான பொய்களை கூறியுள்ளார். கமலாவை எப்போதும் நம்ப முடியாது. பைடனைப் போலவே அவரும் தலைமை தாங்க தகுதியற்றவர். ஒரே ஆண்டில் இந்த நாட்டை அழித்துவிடுவார்.
கமலாவுக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த நான்கு ஆண்டுகள் நேர்மையின்மை, திறமையின்மை, பலவீனம் மற்றும் தோல்விக்கான வாக்குகளாக மாறும். அவர் தொடும் அனைத்தும் பேரழிவாக மாறும்.
உக்ரைன் - ரஷியா இடையேயான பிரச்னையை தடுக்க கமலா ஹாரிஸை ஐரோப்பாவுக்கு அனுப்பினார்கள். என்ன நடந்தது? அங்கிருந்து கமலா திரும்பிய ஐந்து நாள்களில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. கமலாவை பார்த்து புதின் சிரித்தார்.
நான் பதவிக்கு வந்த முதல் நாளே உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன்.
யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர் கமலா ஹாரிஸ். யூத மதத்தை சேர்ந்த டக் எம்ஹாஃப் என்பவரை மணந்த உண்மையை கமலா ஹாரிஸ் புறக்கணித்துள்ளார்.
தொடக்க காலத்தில் வழக்கறிஞராக இருந்த கமலா ஹாரிஸின் கொள்கை, குற்ற தொற்று நோயை உருவாக்கி சான் பிரான்சிஸ்கோ நகரை வாழ முடியாததாக மாற்றியது. ரத்த வெறி கொண்ட குற்றவாளிகளை நாட்டுக்குள் அனுமதித்ததன் மூலம் அவர் குற்றங்களை செய்துள்ளார்.
சட்டவிரோதமாக 2 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்களை கமலா அனுமதித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்கள். சமீபகாலமாக இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிபராக அவர் தேர்தெடுக்கப்பட்டால் நாட்டை அழித்துவிடுவார். அவர்கள் ஏற்படுத்திய சேதங்கள் போதாதென்று, மேலும் 4 ஆண்டுகள் குழப்பத்தை ஏற்படுத்த பதவி உயர்வு பெற விரும்புகிறார். ஏற்கெனவே மிக மோசமான 4 ஆண்டுகளை நாம் பார்த்துள்ளோம்.
இந்த நவம்பரில், கமலா ஹாரிஸ் தேவையில்லை என்று அமெரிக்க மக்கள் சொல்லப் போகிறார்கள். நீங்கள் மீண்டும் தேவையில்லை, வெளியேறுங்கள் என்று சொல்லப் போகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு திறந்தவெளி பொதுக் கூட்டத்தில் பங்கேற்காமல், 10,000 பேர் அமரக் கூடிய மைதானத்தில் தொண்டர்களிடையே டிரம்ப் உரையாற்றினார்.
காது பகுதியில் கட்டு போட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்டில்லாமல் டிரம்ப் காணப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.