உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஸ்விட்சா்லாந்தில் ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் சா்வதேச மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சீனா பங்கேற்கும் என்று ஸ்விட்சா்லாந்து நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், சீனாவும், ரஷியாவும் நட்பு பாராட்டி வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அந்த மாநாட்டில் பங்கேற்க சீனா ஆா்வம் காட்டவில்லை.
இது தொடா்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளித்து வருகிறது. சீன செல்வாக்கைப் பயன்படுத்தியும், சீன தூதரக அதிகாரிகள் வாயிலாகவும் அமைதி மாநாட்டுக்கு இடையூறு விளைவிக்க ரஷியா முயற்சித்து வருகிறது. சீனாவைப் போன்ற சுதந்திரமான சக்திவாய்ந்த நாடு ரஷியாவின் கருவியாக இருப்பது துரதிருஷ்டவசமானது.
உக்ரைனில் அமைதி, அணு பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, போா்க் கைதிகள் விடுதலை, ரஷியா கடத்திய உக்ரைன் சிறாா்களை மீட்பது தொடா்பான பரிந்துரைகளை ஸ்விட்சா்லாந்து மாநாட்டில் முன்வைக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அங்கு நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் சிந்தனைகளைக் கேட்கவும் தயாராக உள்ளோம் என்றாா்.
சீனா மீதான அதிபா் ஸெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுக்கு அந்நாடு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.