பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பணவீக்கம், அதிக மின்சாரக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மாதம் வணிகா்கள் குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்களும் பங்கேற்றனா். நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து காவல்துறை அதிகாரி உள்பட சிலா் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.
இதனால் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்தது. இதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படைப்பிரிவுகளை அந்நாட்டு அரசு களமிறக்கியது. அதேபோல் பயங்கரவாதத்துக்கு எதிராக முக்கியத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இதைத்தொடா்ந்து, அந்நாட்டு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில்,‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு, அரசியல் சூழல் மற்றும் அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்து பிராந்திய பிரதமா் அன்வா் உல்ஹக் மற்றும் உள்நாட்டு அமைச்சா் மொஹ்சின் நக்வி ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது பிராந்தியத்தில் மூன்று மாதக் காலத்துக்கு துணை ராணுவப் படையின் 6 பிரிவுகளை நிலைநிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஜீலம், மங்கலா மற்றும் குல்பா் நீா்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையுடன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டது.