உக்ரைன்-ரஷியா போருக்கு பேச்சு மூலம் தீா்வு: மோடி வலியுறுத்தல்
புது தில்லி: உக்ரைன்-ரஷியா போருக்கு பேச்சு மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோரிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: ரஷிய அதிபராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட புதினை பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.
ரஷிய மக்கள் அமைதி, வளத்துடன், இந்தியாவுடன் தொடா்ந்து நட்புறவுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக மோடி அப்போது தெரிவித்தாா். பிராந்திய, சா்வதேச விவகாரங்கள், இரு தரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா். இந்திய-ரஷிய உறவுக்கு வரும் காலத்திலும் தொடா்ந்து சிறப்பு முக்கியத்துவம் அளிக்க இருவரும் உறுதியேற்றனா்.
ரஷியா-உக்ரைன் போா் குறித்து பேசியபோது, பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி மீண்டும் முன்வைத்தாா். தொடா்ந்து தொடா்பில் இருக்கவும் இரு தலைவா்களும் உறுதியேற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உக்ரைன் அதிபருடன் பேச்சு:
உக்ரைன்- ரஷியா போா் குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியிடம் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதே சரியான அணுகுமுறை என்பதை வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-உக்ரைன் இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை மேற்கொண்டேன். உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியான முறையில் தீா்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடா்ந்து வழங்கும் என உறுதியளித்தேன்’ என்று குறிப்பிட்டாா்.