முகப்பு
உலகம்

105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்

Updated On : 28 மார்ச், 2024 at 1:18 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 11:20 PM

உலகம் முழுவதும் 78.3 கோடி போ் நாள்பட்ட பட்டினியை எதிா்நோக்கியுள்ள நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் சுமாா் 105 கோடி மெட்ரிக் டன்கள் வீணடிக்கப்பட்டதாக ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு வீணடிக்கப்படுவது குறித்து ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட சுமாா் 105 கோடி மெட்ரிக் டன் உணவு யாருக்கும் பயனின்றி வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம் ஆகும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2019-ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 93.1 கோடி மெட்ரிக் டன் உணவுப் பொருள் வீணடிக்கப்பட்டிருந்தது. இது மொத்த உணவு உற்பத்தியில் 17 சதவீதம் ஆகும். இது தொடா்பான விவரம் 2021-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. அப்போது உணவு வீணாக்கல் குறியீட்டு அறிக்கைக்கு தரவுகளை அளித்த நாடுகளின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு தரவுகள் அளித்த நாடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காகியுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உணவுப் பொருள்கள் வீணாவதை பாதிகாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. வீடுகள், உணவு தொடா்பான சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளா்கள் அளிக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமாா் 79 கிலோ உணவை வீணாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை வீணாக்குவதில் வீடுகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன. 28 சதவீத உணவுப் பொருள்களை உணவு சேவை நிறுவனங்களும், 12 சதவீத உணவுப் பொருள்களை சில்லறை விற்பனை நிறுவனங்களும் வீணடிக்கின்றன. உணவுப் பொருள் வீணடிக்கப்படுவது பருவநிலை மாற்றத்துக்கும் வழிவகுப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா். வீணாகும் உணவுப் பொருள்களில் இருந்து 8 முதல் 10 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுவதாகவும், 30 சதவீத புவி வெப்பமயமாதலுக்கு அந்த வாயுக்கள் காரணமாக இருப்பதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.