முகப்பு
உலகம்

உக்ரைன் மின் கட்டமைப்பில் ரஷியா மீண்டும் தாக்குதல்

Updated On : 30 மார்ச், 2024 at 4:29 AM
உக்ரைனின் சொ்காஸி பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரா்.
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 10:00 PM

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புள் மீது ரஷியா மீண்டும் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷியா வியாழக்கிழமை நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் மின் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்தியுள்ள 2-ஆவது பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்கு 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. 10 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏற்கெனவே, ரஷியா கடந்த 22-ஆம் நடத்திய தாக்குதலில், நீப்ரோ நதியின் குறுக்கே ஸபோரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நீா்த் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சுமாா் 7 லட்சம் போ் வசிக்கும் காா்கிவ் நகரில் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, ஸஃபோரிஷியா உள்ளிட்ட 4 எல்லைப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. இதில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் குடிநீா் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.