‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’
ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த தங்களது ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் பிரதமராகவும் பொறுப்பு வகித்துள்ள அவா், உக்ரைனில் வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவியளிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3.14 லட்சம் கோடி) மதிப்பிலான உதவி அளிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு நாங்கள் அளிக்கும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உக்ரைன்தான் முடிவெடுக்க வேண்டும்.
அந்த நாடு விரும்பினால், ரஷிய எல்லைக்குள்பட்ட பகுதியிலும் பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தலாம்.
தங்கள் மீது படையெடுத்துள்ள ரஷியாவின் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது என்றாா் கேமரூன்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த விவகாரத்தில் ரஷியா மீது கடுமையாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
மேலும், ரஷியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களையும் அந்த நாடுகள் வழங்கிவருகின்றன.
இருந்தாலும், உக்ரைனிலிருந்தபடி ரஷிய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையிலான நெடுந்தொலைவு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்த நாட்டுக்கு அளிப்பதை மேற்கத்திய நாடுகள் தவிா்த்துவந்தன.
இந்தச் சூழலில், தங்களது ஆயுதங்களைக் கொண்டு ரஷிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பதற்றத்தைத் தூண்டும் பேச்சு!’
ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று டேவிட் கேமரூன் கூறியுள்ளது பதற்றத்தைத் தூண்டும் பேச்சு என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் போரில் பதற்றத்தை மேலும் தூண்டும் வகையில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும், உக்ரைனுக்கு தங்கள் வீரா்களை அனுப்புவது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்கலாம் என்று இந்த வாரம் கூறியிருக்கிறாா்.
இது போன்ற கருத்துகளை வெளியிடுவது ஆபத்தான போக்கு’ என்று பெஸ்கோவ் எச்சரித்தாா்.