மிகவும் வருந்துகிறேன்.. டொனால்ட் டிரம்ப் வெற்றி குறித்து அண்ணன் மகள்!
டொனால்ட் டிரம்ப் வெற்றி குறித்து மிகவும் வருந்துகிறேன் என மருமகள் கருத்து
டொனால்ட் டிரம்பை கடுமையாக விமரிசித்து வரும் அவரது உறவினரான மேரி எல் டிரம்ப், தனது எக்ஸ் பக்கத்தில், மிகவும் வருந்துகிறேன் என்று டொனால்ட் டிரம்ப் வெற்றி குறித்து பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மகத்தான வெற்றி பெற்று, அந்நாட்டின் 47வது அதிபராகியிருக்கிறார்.
அமெரிக்காவில், டிரம்பின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம் உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து, டிரம்ப்புக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் சகோதரர் ஃபிரெட் டிரம்ப் ஜூனியரின் 59 வயதான மகள் மேரி எல் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், நான் மிகவும் வருந்துகிறேன், நம்மைப் பற்றி இன்னும் சிறப்பாக நினைத்திருந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்: இனி தங்கம் விலை உயருமா?
மனநல ஆலோசகராகவும், டொனால்ட் டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற சுயசரிதைப் புத்தகத்தை எழுதியவருமான மேரி எல் டிரம்பின் கருத்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அளவுக்கு அதிகமாக மற்றும் போதுமான அளவில், எவ்வாறு எனது குடும்பம் உலகிலேயே மிக மோசமான மனிதரை உருவாக்கியது என்ற தலைப்பில், டொனால்ட் டிரம்ப் பற்றிய புத்தகத்தை மேரி எல் டிரம்ப் எழுதி வெளியிட்டிருந்தார்.
டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சிக்கக் கூடியவராக உலக மக்களால் அறியப்படும் மேரி எல் டிரம்ப், கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஆனால் அப்போது டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில்தான், 2024 தேர்தலில், கமலா ஹாரிஸை தோற்கடித்து மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். வெற்றியைத் தொடர்ந்து புளோரிடாவில் உறையாற்றிய டிரம்ப், தான் பல தடைகளைக் கடந்து மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதாகவும், தன் மீதான கொலை முயற்சியைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் கடவுள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.