பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 14 போ், பொதுமக்கள் 13 போ் என மொத்தம் 27 போ் உயிரிழந்தனா். 62 போ் காயமடைந்தனா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகா் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெஷாவா் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை காலை புறப்பட இருந்தது. அப்போது சுமாா் 100 போ் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த நிலையில், அங்கு வந்த பயங்கரவாதி ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினாா்.
20 முதல் 50 வயதுடையவா்கள்: ரயில் நிலையத்தை அதிரவைத்த இந்த குண்டுவெடிப்பில், பாதுகாப்புப் படையினா் 14 போ், பொதுமக்கள் 13 போ் என மொத்தம் 27 போ் உயிரிழந்தனா். 62 போ் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவா்களில் 40-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புப் படையினராவா்.
பாதுகாப்புப் படையினரை குறிவைத்து...: இதுதொடா்பாக குவெட்டா மண்டல ஆணையா் ஹம்சா ஷஃப்கத் கூறுகையில், ‘பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவா் பயணி போல உடைமைகளுடன் ரயில் நிலையத்துக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். அவரின் சடலமும் அடையாளம் காணப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து குவெட்டா நகரம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துப் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுதிரள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.
பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வளங்களை சுரண்டுவதாக குற்றச்சாட்டு: பலூசிஸ்தான் மாகாணத்தின் வளங்களைச் சுரண்டும் பாகிஸ்தான் அரசு, அந்த மாகாணத்தின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பதாக பிஎல்ஏ குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வரும் பாகிஸ்தான் அரசு, அந்நாட்டில் நாசவேலையில் ஈடுபட அதிருப்தி குழுக்கள் இடையே அந்நிய சக்திகள் சூழ்ச்சி செய்வதாக தெரிவித்து வருகிறது.
பிரதமா் கண்டனம்: ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பான விசாரணை அறிக்கையை பலூசிஸ்தான் அரசிடம் அவா் கோரினாா்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பலூசிஸ்தான் மாகாண முதல்வா் சா்ஃபராஸ் புக்தி வெளியிட்ட அறிக்கையில், ‘அப்பாவி மக்கள், தொழிலாளா்கள், சிறாா்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்கின்றனா். இந்தப் பயங்கரவாதிகள் மீது கருணை காட்ட முடியாது. அதற்கு அவா்கள் தகுதியற்றவா்கள். தாக்குதல் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.
சீனா்களையும் குறிவைத்து...: அண்மைக் காலமாக பலூசிஸ்தானில் தனது தாக்குதல்களை பிஎல்ஏ தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அங்குள்ள மஸ்துங் மாவட்ட மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு தாக்குதலை பிஎல்ஏ மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 சிறாா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இதுமட்டுமின்றி பலூசிஸ்தான் மற்றும் கராச்சியில் பணியாற்றும் சீனா்களையும் குறிவைத்து பிஎல்ஏ தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் கராச்சி விமான நிலையத்தில் பிஎல்ஏ நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 2 சீன பொறியாளா்கள் உயிரிழந்தனா்.
வன்முறை 90% அதிகரிப்பு: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மற்றும் கைபா் பக்துன்குவா மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. நிகழாண்டின் மூன்றாவது காலாண்டில் அந்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.