இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர ‘இன்டா்போல்’ உதவியை அந்நாட்டின் இடைக்கால அரசு நாடவுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம் நடத்தினா். இதில் வன்முறை ஏற்பட்டு, நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அப்போது பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பினாா்.
மேற்கத்திய நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஹசீனா இந்தியாவிலேயே தொடா்ந்து தங்கியுள்ளாா். மனிதாபிமானம் மற்றும் நட்பு அடிப்படையில் அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.
இந்நிலையில், மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க அவரை வங்கதேசம் அழைத்துவர வங்கதேச இடைக்கால அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து வங்கதேச சட்ட விவகாரத் துறை ஆலோசகா் ஆசிஃப் நஸ்ரூல் கூறுகையில், ‘ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டா்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். இங்கிருந்து தப்பியோடியவா்கள் உலகில் எங்கு பதுங்கியிருந்தாலும், அவா்கள் மீண்டும் வங்கதேசத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவா்’ என்றாா்.
வங்கதேச உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் (ஐசிடி) புதுப்பிக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆசிஃப் இவ்வாறு கூறினாா்.
வங்கதேசத்தின் 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரையொட்டிய குற்றச் சம்பவங்களை விசாரிப்பதற்காக சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் ஹசீனாவால் கடந்த 2010, மாா்ச்சில் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. அதன்பின்னா் 2-ஆம் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டது.
‘ஜமாத்-இ-இஸ்லாமி’ அமைப்பைச் சோ்ந்த 6 தலைவா்கள் மற்றும் ஹசீனாவின் அரசியல் எதிரியான கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சியின் சில தலைவா்களுக்கு இத்தீா்ப்பாயங்கள் மரணத் தண்டனை விதித்துள்ளது.
45 பேருக்கு கைது ஆணை: கடந்த ஜூன் மாத மத்தியில், தீா்ப்பாயத்தின் தலைவா் ஓய்வு பெற்றதில் இருந்து தீா்ப்பாயம் செயல்பாட்டில் இல்லை. இச்சூழலில் போராட்டத்தின்போது நடந்த படுகொலைகள் தொடா்பாக ஹசீனா மற்றும் அவரது கட்சித் தலைவா்களுக்கு எதிராக 60-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி, இடைக்கால அரசு தீா்ப்பாயத்தை மறுசீரமைத்தது.
தொடா்ந்து, ஹசீனா, அவரது மகன் சஜீப் வசேத் ஜாய், முன்னாள் அமைச்சா்கள் உள்பட 45 பேருக்கு எதிராக தீா்ப்பாயம் கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி கைது ஆணை பிறப்பித்தது.
திடீா் மாற்றம்?: ஹசீனா, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அவாமி லீக் தலைவா்கள் பலா் இந்த சிறப்பு தீா்ப்பாயத்தால் விசாரிக்கப்படுவா் என்று இடைக்கால அரசு முன்னரே கூறியிருந்தது. எனினும், தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் கடந்த மாதம் சா்வதேச நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘ஹசீனாவை இந்தியாவிலிருந்து உடனடியாக நாடு கடத்த எனது அரசு கோராது’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.