மூன்றாம் பாலினத்தவர்களை ராணுவத்திலிருந்து நீக்க முடிவெடுத்துள்ள டிரம்ப்!
அமெரிக்க ராணுவத்தில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களை நீக்க டிரம்ப் முடிவு.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். வருகிற ஜனவரி 20 அன்று அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை திரும்பியவுடன் ராணுவத்தில் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை பணியிலிருந்து நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகவும் இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க ராணுவத்தில் 15,000 க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், மூன்றாம் பாலினத்தவர்கள் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் எனக்கூறி, அவர்கள் சேவை செய்ய தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எலான் மஸ்க், விவேக் ராமசாமி சவால்: சீனா அச்சம்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்னர் தனது பிரசாரத்தில் ராணுவப் படைக்கு கான்ஃபெடரேட் ஜெனரல் என்ற பெயரை மீட்டெடுக்க உள்ளதாக டிரம்ப் உறுதியளித்திருந்தார். தீவிர எழுச்சிக்கு எதிரான டிரம்ப்பின் இந்தக் கருத்து மூன்றாம் பாலினத்தவர்களைக் குறிவைத்து பேசப்பட்டது.
அதேபோல, முந்தைய பிரசாரங்களிலும் முன்றாம் பாலினத்தவர்களை தேர்தல் சேவை உறுப்பினர்களாக நியமிக்க தடை விதித்த டிரம்ப், எக்ஸ் தளத்தில் செய்த பிரசார விளம்பரத்தில் அவர்களை பலவீனமானவர்கள் எனக் குறிப்பிட்டு “நம்மிடம் வோக் (எழுச்சி மனப்பான்மை கொண்ட) ராணுவப்படை இருக்காது” என தெரிவித்திருந்தார்.
தனது கொள்கை சார்ந்த முன்னுரிமைகளில் அமெரிக்க இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், உள்நாட்டு அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும் ஆவணமின்றி புலம்பெயர்ந்த மக்களை பெருமளவில் வெளியேற்ற தேசிய காவல்துறை மற்றும் ராணுவப் படைகளைப் பயன்படுத்தவுள்ளார்.
இதில், அமெரிக்க தெருக்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவது சட்டங்களை மீறுவது மட்டுமின்றி, அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு எதிராக மாறும் நிலையை உருவாக்கும் என்று ராணுவத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.