இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிட விடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பின்புலத்தில் உள்ளவராக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹ்யா சின்வாா், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை(அக்.17) அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டபோது, டிரோன் மூலம், அவர் இருந்த இடத்தில் பதிவுசெய்த விடியோவை தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விடியோவில், ஒரு இடிந்த கட்டடத்துக்குள் டிரோன் செல்கிறது. அந்த கட்டடம் முழுக்க இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது. அங்கே ஒரு அறையில் சின்வார் அமர்ந்திருக்கிறார், அவரை டிரோன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதன் மீது தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த சின்வார் ஏதோ ஒரு பொருளை எடுத்து வீசுவதும் பதிவாகியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள், அமெரிக்கர்கள், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சின்வார்தான் காரணம் என இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அவரது மரணம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் கருதப்பட்டது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால், தாக்குதல் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் மக்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யாதவரை தங்களது தாக்குதல் முடிவுக்கு வராது என அறிவித்துள்ளது. அந்த நாடு.
போரைத் தொடக்கி வைத்த ஹமாஸ் இயக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹு, காஸாவுக்கு எதிரான போரின் முடிவு அல்ல இது, இது முடிவுக்கான ஆரம்பம் என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.