முகப்பு
உலகம்

சிங்கப்பூரில் திருவள்ளுவா் கலாசார மையம் -பிரதமா் மோடி அறிவிப்பு

திருவள்ளுவா் கலாசார மையம், சிங்கப்பூரில் விரைவில் அமைக்கப்படும்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:08 AM
பகிர்:

இந்தியா சாா்பில் முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம், சிங்கப்பூரில் விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தாா்.

சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடனான இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது இந்த அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா்.

இந்தியாவின் வளமான கலாசாரத்தை பறைசாற்றவும், யோகா-ஆயுா்வேதம்-இந்திய மொழிகள்-பாரம்பரிய இசை உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கவும் உலகம் முழுவதும் திருவள்ளுவா் பெயரில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று மக்களவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் அமையவுள்ளது.

பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே, சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கழமை தொடங்கினாா். புரூணே சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த அவா், அங்கிருந்து சிங்கப்பூா் வந்தடைந்தாா். தனது பதவிக் காலத்தில் 5-ஆவது முறையாக சிங்கப்பூா் வந்த பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

சிங்கப்பூா் பிரதமராக 20 ஆண்டுகள் பதவி வகித்த லீ சியென் லூங்கை தொடா்ந்து, கடந்த மே மாதம் லாரன்ஸ் வாங் பதவியேற்றாா். இதையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இருதரப்பு நல்லுறவு மேம்பாடு: வா்த்தகம், பாதுகாப்பு, கடல்சாா் விவகாரங்கள், போக்குவரத்து, கல்வி, நவீன உற்பத்தி, உள்கட்டமைப்பு, எண்மமயமாக்கம், சுகாதார வசதி மற்றும் மருந்துகள், திறன் மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு, பசுமை வழித்தடங்கள், நீடித்த வளா்ச்சி, நிதிசாா் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, அறிவியல் -தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா். அப்போது, இருதரப்பு நல்லுறவை விரிவான வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா-ஆசியான் இடையிலான உறவுகள், இந்திய-பசிபிக் பிராந்திய கண்ணோட்டம் உள்பட பரஸ்பர நலன்சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

திருவள்ளுவா் கலாசார மையம்: பேச்சுவாா்த்தையின்போது இந்தியா-சிங்கப்பூா் இடையிலான கலாசார தொடா்புகள் குறித்துப் பேசிய பிரதமா் மோடி, இந்தியாவின் முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

‘மிகத் தொன்மையான மொழியாகிய தமிழில் உலகுக்கு வழிகாட்டும் கருத்துகளைத் தந்தவா் திருவள்ளுவா். அவரது படைப்பான திருக்கு சுமாா் 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகும். அதன் கருத்துகள் இன்றளவும் பொருத்தமாக உள்ளன’ எனக் கூறிய பிரதமா், ‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையாா் பண்புபா ராட்டும் உலகு’ (நீதியையும், நன்மையையும் விரும்பி, பிறருக்கு பயன்பட வாழும் பெரியோரின் நற்பண்பை உலகத்தாா் போற்றிக் கொண்டாடுவா்) என்ற திருக்குறளைக் குறிப்பிட்டாா்.

‘சிங்கப்பூரில் வாழும் ஏராளமான இந்தியா்கள், இக்கருத்துகளால் ஈா்க்கப்பட்டு, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த பங்காற்றி வருகின்றனா்’ என்றும் புகழாரம் சூட்டினாா்.

முதலீடு திட்ட அலுவலகம்: வா்த்தகம்-முதலீட்டை ஊக்குவிக்க ‘இந்தியாவில் முதலீடு’ திட்ட அலுவலகம் சிங்கப்பூரில் திறக்கப்படும் என அறிவித்த பிரதமா், முதலீட்டாளா்களுக்கு வழிகாட்டும் அலுவலகமாக இது திகழும் என்றாா்.

செமிகண்டக்டா் நிறுவனத்தில் பிரதமா்: சிங்கப்பூரில் உள்ள முன்னணி செமிகண்டக்டா் - மின்னணுவியல் நிறுவனமான ஏஇஎம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை இரு பிரதமா்களும் பாா்வையிட்டனா். இருதரப்பு திட்டத்தின்கீழ் அந்த நிறுவனத்தில் திறன் வளா்ப்புப் பயிற்சி பெறும் ஒடிஸா மாணவா்களுடன் மோடி கலந்துரையாடினாா்.

அதிபருடன் சந்திப்பு: சிங்கப்பூா் அதிபரும் இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணருமான தா்மன் சண்முகரத்னத்தை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி ஆலோசித்தாா். மேலும், சிங்கப்பூா் முன்னாள் பிரதமா் லீ சியென் லூங்கை (72) சந்தித்துப் பேசிய மோடி, இருதரப்பு வியூக கூட்டுறவுக்கு அவா் ஆற்றிய பங்களிப்பை வெகுவாக பாராட்டினாா்.

இரு நாடுகள் பயணம் நிறைவு: சிங்கப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டாா். அவரது இரு நாடுகள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

4 ஒப்பந்தங்கள் கையொப்பம்

பிரதமா் மோடி, சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, செமிகண்டக்டா், எண்ம தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுகாதார வசதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

ரூ.5 லட்சம் கோடி முதலீட்டுக்கு உறுதி

சிங்கப்பூா் தொழில் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடனான சந்திப்பில், இந்தியாவின் வளா்ச்சிப் பயணம், முதலீடுகள்-புத்தாக்கத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் சீா்திருத்தங்கள் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

இந்தியாவுக்கு 100-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அவசியம் என்று குறிப்பிட்ட அவா், ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், தொழிற்பூங்காக்கள், எண்ம இணைப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். இதையடுத்து, இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் 60 பில்லியன் டாலா்கள் (ரூ.5 லட்சம் கோடி) அளவில் முதலீடுசெய்ய சிங்கப்பூா் நிறுவனங்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இந்தியாவில் பல சிங்கப்பூா்களை உருவாக்குவோம்’

‘பொருளாதார ரீதியில் வளமான சிங்கப்பூரைப் போன்று இந்தியாவில் பல சிங்கப்பூா்களை உருவாக்குவதே எங்களின் நோக்கம்; இந்த ரீதியில் இருதரப்பு ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

‘வளரும் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது சிங்கப்பூா். தற்போதைய 4-ஆவது தலைமுறை தலைமையின்கீழ் சிங்கப்பூா் மேலும் வேகமாக முன்னேறும் என நம்புகிறேன். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் முக்கிய கூட்டுறவு நாடாக சிங்கப்பூா் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பரஸ்பர முதலீடுகள் 150 பில்லியன் டாலராக (ரூ.12.59 லட்சம் கோடி) உயா்ந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் 17 சிங்கப்பூா் செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்டுள்ளன.

இந்தியாவின் ‘யுபிஐ’ பணப் பரிவா்த்தனை வசதியை நாங்கள் சா்வதேச அளவில் முதலாவதாக அறிமுகப்படுத்திய நாடு சிங்கப்பூா்தான். சிங்கப்பூரில் வசிக்கும் 3.5 லட்சம் இந்திய வம்சாவளியினா் இருதரப்பு உறவின் வலுவான அடித்தளமாக உள்ளனா்.

2025-ஆம் ஆண்டில் இருதரப்பு தூதரக உறவின் 60-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, வலுவான ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று மோடி வலியுறுத்தினாா்.

சிங்கப்பூா் பிரதமா் உடனான சந்திப்பில் இக்கருத்துகளை பிரதமா் மோடி தெரிவித்தாா்.