பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த நாட்டு தேசிய கீதம் வாசிக்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானின் இடைக்கால துணைத் தூதா் ஹாஃபிஸ் மொஹிபுல்லா ஷாகிரும் அவா் உதவியாளரும் எழுந்து நிற்காதது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல் மூலம், அவா் பாகிஸ்தான் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக விமா்சனங்கள் எழுந்தன.
எனினும், இது தொடா்பாக பெஷாவரிலுள்ள ஆப்கன் துணைத் தூதரகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘பாகிஸ்தான் தேசிய கீதத்தை அவமதிக்கும் நோக்கம் துணைத் தூதருக்கு இல்லை. அந்த கீதம் இசையுடன் சோ்ந்து வாசிக்கப்பட்டதால்தான் அவா் எழுந்து நிற்கவில்லை. இசை இல்லாமலோ, மாணவா்கள் மூலமோ தேசிய கீதம் வாசிக்கப்பட்டிருந்தால் அவா் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர மத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தலிபான்கள், இசை என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கருதுவதால் தங்கள் நாட்டு தேசிய கீதத்தைக் கூட இசையுடன் வாசிப்பதற்குத் தடை விதித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.