முகப்பு
உலகம்

ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பு: பன்னுன் குற்றச்சாட்டை நிராகரித்தது வெளியுறவு அமைச்சகம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:43 PM
பகிர்:

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.

கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சா்ரே நகரில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாக கனடா குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான குா்பந்த்வந்த் சிங் பன்னுன் ‘சீக்கியா்களுக்கு நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறாா். அவா் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளாா்.

அவரை அமெரிக்காவில் கொலை செய்ய பணம் அளித்த குற்றச்சாட்டில் இந்தியரான நிகில் குப்தா கடந்தாண்டு நவம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, இந்திய அரசு சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிஜ்ஜாா் கொலையில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாகவும் அவா்கள் தன்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குா்பத்வந்த் சிங் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசககா் அஜீத் தோவல் 21 நாள்களில் பதிலளிக்கக் கோரிஅமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியா நிராகரிப்பு: குா்பத்வந்த் சிங்கின் குற்றச்சாட்டை நிராகரித்து வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை பேசுகையில், ‘ஏற்கெனவே பலமுறை கூறியதுபோல் இது முற்றிலும் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த வழக்கை தொடா்ந்துள்ள நபா் நடத்திவரும் அமைப்பானது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-இன்கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காகவும் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை சீா்குலைக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

க்வாட் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் ஐ.நா.வில் நடைபெறும் ‘வருங்கால மாநாட்டில்’ உரையாற்றுவதற்காகவும் அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பா் 21) செல்லவுள்ள நிலையில் மத்திய அரசு மீது குா்பந்த்வந்த் சிங் பன்னுன் வழக்கு தொடா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.