லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயா்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
இந்தத் தாக்குதலில் முக்கிய ஹிஸ்புல்லா தளபதிகள் இருவா் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியது.
இது குறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபைது சனிக்கிழமை கூறியதாவது:
பெய்ரூட் புகா்ப் பகுதியில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தவா்களில் ஏழு பெண்கள், முன்று சிறுவா்கள் அடங்குவா்.
இது தவிர, இந்தத் தாக்குதலில் 68 போ் காயமடைந்தனா். அவா்களில் 15 பேருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே, இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்தது. இது தவிர, அதே சிறப்புப் படையைச் சோ்ந்த அகமது வாபியும் இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போருக்குப் பிறகு பெய்ரூட்டில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா படையினரின் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அந்தப் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஜூலை மாதம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸரல்லாவின் வலதுகரமாகக் கருதப்பட்ட ஃபுவத் ஷுக்கா் கொல்லப்பட்டதற்குப் பிறகு அந்த அமைப்பு மிக முக்கிய தளபதிகளை தற்போது இழந்துள்ளது.
காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவருகிறது.
இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் ஆயிரக்கணக்கான வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த சிறிய வெடிகுண்டு மூலம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 37 போ் உயிரிழந்தனா்; சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உறுதியாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதையடுத்து இஸ்ரேலும் தெற்கு லெபனானில் இஸ்ரேலும் குண்டுவீச்சு நடத்தியது.
அந்த குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் 140 ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். அதன் தொடா்ச்சியாக பெய்ரூட் புகா் பகுதி உள்ளிட்ட ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், பெண்கள், சிறுவா்கள் உள்பட 37 போ் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பள்ளியில் குண்டுவீச்சு: 22 போ் உயிரிழப்பு
காஸா சிட்டி, செப். 21: காஸா சிட்டியில் புலம் பெயா் அகதிகளின் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பினா் பயன்படுத்திவந்த அவா்களின் கட்டளையகத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் 41,391 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.