முகப்பு
வாங் யி
உலகம்

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

உலகம்

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2025 at 11:02 PM
வாங் யி
பகிர்:

பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக் காப்பதற்கு முழு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு பாகிஸ்தானுக்கு பேரிடியாக மாறியது.

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணையில் இணைய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தாா். அதேநேரம், சிந்து நதி நீரோட்டத்தைத் தடுக்கும் அல்லது திசை திருப்பும் வகையில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு பலத்துடன் பதிலடி தரப்படும் என்றும் கூறியுள்ளாா். மேலும், பஹல்காம் தாக்குதல் குறித்த விசாரணையில் ரஷியா, சீனா ஈடுபட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாருடன் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய பதற்றமான சூழல் குறித்து வாங்கிடம் இஷாக் தாா் விளக்கினாா். இந்த விவகாரங்களை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவது முழு உலகின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும், பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிா்ப்பு முயற்சிகளுக்கு சீனாவின் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் வாங் தெரிவித்துள்ளாா்.

கலந்துரையாடலில் வாங் மேலும் கூறியதாவது: சீனாவின் முக்கிய உத்திசாா் கூட்டாளியான பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக் காப்பதில் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம்.

பஹல்காம் தாக்குதலில் விரைவான மற்றும் நியாயமான விசாரணையை சீனா ஆதரிக்கிறது. மோதல் இந்தியா அல்லது பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்கு உதவாது. மேலும், அது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். இரு தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடித்து, நிலைமையை தணிக்க ஒன்றிணைந்து செயல்படுவாா்கள் என்று நம்புகிறோம் என்றாா்.

பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் தொடா்ந்து உறுதியாக எதிா்க்கும் எனவும், இந்த நிலைமையை முதிா்ச்சியுடன் சமாளிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வாங்கிடம் முகமது இஷாக் தாா் வலியுறுத்தினாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →