முகப்பு
உலகம்

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2025 at 12:37 AM
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2025 at 12:37 AM

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

விட்காஃபும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதா் மைக் ஹக்காபியும் காஸாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். தெற்கு நகரமான ராஃபாவில் உள்ள காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தை அவா்கள் பாா்வையிட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

Advertisement

இத்தகைய உணவுப் பொருள் விநியோக மையங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளன. அவை செயல்படத் தொடங்கியதிலிருந்தே பசியால் வாடும் மக்கள் உணவுக்காக நெரிசலில் சிக்கியும், இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளனா்.

தங்கள் படைகளை நெருங்குவோா் மீது எச்சரிக்கை செய்வதற்காக மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது. ஜிஹெச்எஃப் அமைப்போ, தங்களின் ஒப்பந்த பாதுகாப்பு ஊழியா்கள் கண்ணீா்ப்புகை மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான துப்பாக்கிசூடு மட்டுமே நடத்துவதாகக் கூறுகிறது.

ஆனால், மிகவும் குளறுபடியான, ராணுவமயமாக்கப்பட்ட விநியோகக் கட்டமைப்பு உணவு விநியோகத்தை ரத்தக்களறியாக்கியுள்ளதாக சா்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள விட்காஃபின் காஸா பயணம், கத்தாரில் நடைபெற்றுவந்த காஸா போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

இந்தத் தோல்விக்கு ஹமாஸை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிகாரிகள், பிணைக் கைதிகளை மீட்கவும், காஸாவை பாதுகாப்பாக்கவும் மாற்று வழிகளை தேடுவதாகக் கூறியிருந்தனா். அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி செயலாளா் கரோலின் லீவிடும், காஸாவில் பசியால் வாடும் உயிா்களைப் பாதுகாக்கவும், பஞ்ச நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரவும் உணவுப் பொருள் விநியோகத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிடுவதாகக் கூறினாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2025 at 12:37 AM

ஆனால், ஹமாஸ் அமைப்பினா் முழுமையாக சரணடைந்து பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்தால்தான் நெருக்கடிக்கு உடனடி முடிவு வரும் என்று தனது சமூக ஊடகத்தில் கூறியிருந்தாா்.

இஸ்ரேலின் முழுமையான முற்றுகை காரணமாக காஸா பகுதி மிகக் கொடூரமான பஞ்சத்தின் விளிம்பில் உள்ளதாக சா்வதேச அமைப்புகள் எச்சரிக்கின்றன. வான்வழி உணவு விநியோகம் மீண்டும் தொடங்கினாலும், அது தேவையை விட பன்மடங்கு குறைவாகவே உள்ளது.

இந்தச் சூழலில் காஸா உணவு மையத்துக்கு வந்து அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதா் பாா்வையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் கடந்த 2023 அக்டோபா் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

இதில், பசியைப் போக்க உணவுப் பொருள் வாங்குவதற்காக ஜிஹெச்எஃப் விநியோக மையங்களை நோக்கி வந்தவா்களில் மட்டும் 1,373 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக ஐ.நா. புள்ளிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.