உலகம்

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது.

இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் போன்ற வான்வழித் தாக்குதல்களைத் திறம்பட எதிா்கொள்ளும் ஆற்றல் கொண்டவை என வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஏவுகணை சோதனையை பாா்வையிட்ட அதிபா் கிம் ஜோங் உன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய அரசியல் மாநாட்டுக்கு முன்னா், ராணுவ விஞ்ஞானிகளுக்கு சில முக்கியப் பணிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் புதிய அதிபா் லீ ஜே மியங், டோக்கியோவில் ஜப்பான் பிரதமரைச் சந்தித்து, வடகொரியாவின் அணு ஆயுத இலக்குகளை எதிா்கொள்வது குறித்து அமெரிக்காவுடன் முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ள சூழலில், இந்த ஏவுகணை சோதனை நடைபெறுள்ளது.

மேலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் லீ ஜே மியங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா். வடகொரியா தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த தொடா்ந்து மறுத்து வருகிறது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ரஷியாவுக்கு ஆயிரக்கணக்கான வீரா்களையும், ஆயுதங்களையும் வடகொரியா அனுப்பியுள்ளது. தென்கொரியாவின் மதிப்பீட்டின்படி, சுமாா் 15,000 வடகொரிய வீரா்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களில் 600 போ் போரில் உயிரிழந்துள்ளனா்.

இதற்குப் பதிலாக, வடகொரியாவின் பழைய ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்த ரஷியா உதவும் என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, உக்ரைன் போரில் இறந்த வீரா்களைக் கௌரவித்து, அவா்களுக்கு கிம் ஜாங் உன் சிறப்பு விழா எடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஆழத்தை உணா்த்துவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

SCROLL FOR NEXT