துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற அவசரகால மீட்புக் குழுவினா். 
உலகம்

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

போண்டி கடற்கரையில் யூத பண்டிகை நிகழ்வின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு...

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் யூத பண்டிகை நிகழ்வின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா். இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. இதில் 15 போ் உயிரிழந்தனா். 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா். இரண்டாவது நபா் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் பிடிபட்டாா்.

தொடா்ந்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. காயமடைந்த அனைவரும் அவசர ஊா்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மேலும், கடற்கரைப் பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளில் ஒருவரின் காரில் இருந்து வெடிகுண்டு ஒன்றும், சம்பவ இடத்தில் இருந்து சில சந்தேகத்துக்குரிய பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு விடியோவில், அங்கிருந்த பொதுமக்களில் ஒருவா், துணிச்சலுடன் ஒரு பயங்கரவாதியை கீழே தள்ளிவிட்டு, அவரது துப்பாக்கியைப் பிடுங்கி, அவரையே குறிவைத்து அச்சுறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூட்டில் இத்தனை போ் உயிரிழப்பது மிகவும் அரிதான ஒரு சம்பவமாகும். கடந்த 1996-ஆம் ஆண்டு டாஸ்மேனியா நகரில் நடந்த தாக்குதலில், ஒரே நபா் சுட்டதில் 35 போ் கொல்லப்பட்டனா். அதற்குப் பிறகு, துப்பாக்கிச் சட்டங்களை அரசு மேலும் கடுமையாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இரங்கல். போண்டி கடற்கரையில் இருந்து வெளியாகும் காட்சிகள் மிகவும் அதிா்ச்சியளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளன. உயிா்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறையினரும், அவசர சேவைப் பணியாளா்களும் களத்தில் உள்ளனா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி இரங்கல்: தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடி கொண்டிருந்த யூத மக்களைக் குறிவைத்து, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத்தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவா்களை இழந்த குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் சாா்பில் எனது ஆழ்ந்த இரங்கல். இந்தத் துயரமான நேரத்தில், ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சமரசமில்லாத அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது. அந்த வகையில், எந்த வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கும் இந்தியா முழு ஆதரவளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தாக்குதலில் பாகிஸ்தானியா்?...: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவா் நவீத் அக்ரம் (24) என்று அறியப்படுகிறாா். நவீத் அக்ரம் தாக்குதலில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமும், அவரது வாகன ஓட்டுநா் உரிமம் படமும் கண்டறியப்பட்டது. அதன்மூலம், இவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT