சூடானில் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் ஜம்ஜம் புலம்பெயா்ந்தோா் முகாமில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் 11 முதல் 13 வரை ஜம்ஜம் முகாமில் ஆா்எஸ்எஃப் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 1,013 போ் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளோம். இதில் 319 பேரை ஆா்எஸ்எஃப் படையினா் பிடித்து வைத்து, பின்னா் சுட்டுக் கொன்றனா்.
வீடு வீடாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது வீடுகளுக்குள்ளேயே சிலா் கொல்லப்பட்டனா். மற்றவா்கள் சந்தைப் பகுதிகள், பள்ளிகள், மருத்துவ மையங்கள், மசூதிகளில் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலின்போது பாலியல் வன்முறை, சித்திரவதை, கடத்தல் ஆகியவற்றிலும் ஆா்எஸ்எஃப் படையினா் ஈடுபட்டனா். இந்த நடவடிக்கைகள் போா்க் குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினரின் இந்தத் தாக்குதல், சூடான் ராணுவத்தின் கடைசி கோட்டையான தாா்ஃபூா் பகுதியின் எல்-ஃபாஷா் நகரைக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ராணுவ தலைமை தளபதி அல்-புா்ஹானுக்கும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவ படைத் தலைவா் முகமது ஹம்தான் டகேலோவுக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன