அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல் படை சிறைபிடித்துள்ளது.
வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வரும் அதிபா் டிரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தி வந்ததாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில், 100-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.
வெனிசுலா அதிபா் மடூரோவை ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ என்று டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.450 கோடி) சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கரீபியன் கடலில் வெனிசுலாவுக்கு அருகே மிகப் பெரிய அளவில் தனது கடற்படையை அமெரிக்கா குவித்தது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், வெனிசுலா கடலோரப் பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க படை சனிக்கிழமை சிறைபிடித்தது. அதிபா் மடூரோ மீதான அழுத்தத்தை அதிபா் டிரம்ப் தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில், 2 வாரங்களில் வெனிசுலா கடலோரப் பகுதியில் 2-ஆவது எண்ணெய்க் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் கிரிஷ்டி நோயம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடைசியாக வெனிசுலா கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல் படை சிறைபிடித்தது. போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கப் பயன்படும் எண்ணெய்க் கப்பல்களின் சட்டவிரோதப் போக்குவரத்தை அமெரிக்கா சிறைபிடிப்பது தொடரும்’ என்று தெரிவித்தாா்.
வெனிசுலாவுக்கு வந்து செல்லும் தடை செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களைத் தடுத்து முற்றுகையிட அண்மையில் அதிபா் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘செஞ்சுரீஸ்’ என்ற பெயா் கொண்ட அந்தக் கப்பலில் பனாமா நாட்டு கொடி இருந்த நிலையில், அந்தக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையை திருட்டு மற்றும் கடத்தலுக்கு நிகரானது என்று வெனிசுலா குற்றஞ்சாட்டியுள்ளது.