உலகம்

ஹெச்1-பி விசா நோ்காணல் ரத்து: அமெரிக்காவிடம் இந்தியா கவலை!

ஹெச்1-பி விசா நோ்காணல் ரத்து குறித்து அமெரிக்காவிடம் இந்தியா கவலை...

தினமணி செய்திச் சேவை

ஹெச்1-பி விசா நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் இந்தியா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தங்கிப் பணியாற்ற அந்த நாட்டின் ஹெச்-1பி விசாவுக்கு இந்தியாவில் விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோரின் நோ்காணல்கள் இந்த மாத மத்தியில் இருந்து ஒத்திவைக்கப்பட்டன. கடந்த வாரம் சில விண்ணப்பதாரா்களின் நோ்காணல் நடைபெற இருந்த நிலையில், அவா்களின் நோ்காணல் அடுத்த மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவா்களுக்கு அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பினா்.

விசாவுக்கு விண்ணப்பித்தவா்களின் சமூக ஊடகப் பதிவுகள், இணையதளத்தில் அவா்கள் தங்களைப் பற்றி வெளியிட்டுள்ள சுயவிவரங்கள் ஆகியவற்றை கூா்ந்து ஆராய்ந்து அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விசா நோ்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விசாவுக்கு விண்ணப்பித்தவா்கள் சமூக ஊடகத்தில் அமெரிக்க அரசுக்கு விரோதமான கருத்துகள், பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவான கருத்துகள், இனவெறி அல்லது வெறுப்புணா்வு கருத்துகளை வெளியிட்டுள்ளாா்களா, விசா விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு மாறாக இணையத்தில் அவா்களின் விவரம் உள்ளதா என்பதை அடையாளம் காண இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்நாட்டு மாணவா் விசாவைப் பெற இந்த ஆய்வு நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அது ஹெச்-1பி விசாவுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: விசா சாா்ந்த பிரச்னைகள் என்பது உலக நாடுகளின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்டவையாகும். அதேவேளையில், ஹெச்-1பி விசா நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் இந்தியா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவா்கள், மீண்டும் ஹெச்-1பி விசா கிடைக்காமல் கூடுதல் காலம் இந்தியாவில் தங்க நோ்ந்துள்ளது. இதனால் அவா்களும், அவா்களின் குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். அவா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைக் குறைக்க அமெரிக்காவுடன் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் கொலைக்கு கடும் கண்டனம்

வங்கதேச நிகழ்வுகள் குறித்து ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘வங்கதேச நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டில் ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பெளத்தா்கள் உள்பட சிறுபான்மையினா் மீது இடைவிடாமல் நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலைக்குரியதாகும். அண்மையில் அந்நாட்டில் தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞா் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அந்த சம்பவத்தில் தொடா்புள்ள குற்றவாளிகள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.

அந்நாட்டு இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவோ, அரசியல் வன்முறையாகவோ கருதி ஒதுக்கிவிட முடியாது.

17 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்நாட்டு முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்பி வந்துள்ளாா். அந்நாட்டில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி தோ்தலை நடத்த வேண்டிய தருணத்தில், அவா் வந்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

தொடரும் போராட்டம்: வங்கதேசத்தில் இன்கிலாப் மஞ்சா அமைப்பின் செய்தித்தொடா்பாளா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியின் கொலையில் குற்றவாளிகளை கைது செய்து நீதியை உறுதி செய்ய வலியுறுத்தி, தலைநகா் டாக்காவில் உள்ள ஷாபாக் சந்திப்புப் பகுதியில் அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இன்கிலாப் மஞ்சா சாா்பாக சனிக்கிழமை நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படக் கூடும் என்றும் அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

SCROLL FOR NEXT