துருக்கியில், விமான விபத்தில் பலியான லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு ராணுவ மரியாதை அளித்துள்ளது.
லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் துருக்கி அரசுடன் உயர்மட்ட பேச்சுவாரத்தை மேற்கொள்ள தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளுக்குப் பிறகு அங்காராவில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த டிச.23 அன்று இரவு 8.30 மீண்டும் லிபியாவுக்கு புறப்பட்டனர். அப்போது, பயணம் துவங்கிய 40 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட மூத்த அதிகாரிகள் அனைவரும் பலியாகினர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினரிடம் இருந்து பெறபட்ட டி.என்.ஏ. மாதிரிகளின் மூலம் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், பலியான லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்டோரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் லிபியாவின் தேசிய கொடி போர்த்தப்பட்டு அவர்களது தாயகம் கொண்டுச் செல்வதற்காக, துருக்கியின் விமானப் படைத் தளத்துக்கு இன்று (டிச. 27) காலை கொண்டு வரப்பட்டன.
துருக்கி ராணுவத்தின் தலைமை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில், பலியான லிபியா அதிகாரிகளுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் தனி விமானம் மூலம் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.