கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஹமாஸ் படையினரால் ஒப்படைக்கப்பட்ட நான்கு சடலங்களின் உடற்கூறு ஆய்வில், அவற்றில் இரண்டு ஷிரி பிபாஸின் குழந்தைகளுடையவை என்பதும் மற்றொரு உடல் ஓடட் லிஃப்ஷிட்ஸினுடையது என்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால் ஷிரி பிபாஸ் என்று கூறி ஹமாஸ் ஒப்படைத்த உடல் அவருடையது இல்லை. இதுமட்டுமின்றி, இஸ்ரேலில் இருந்து ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட யாருடைய மரபணுவும் அந்த உடலுடன் ஒத்துப்போகவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலை மாற்றி ஒப்படைத்தது ஹமாஸ் அமைப்பினரின் மிகக் கடுமையான ஒப்பந்த விதிமீறல் என்று கண்டனம் தெரிவித்தாா்.ஹமாஸ் விளக்கம்: இஸ்ரேல் கடந்த 2023-ஆம் ஆண்டு நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த ஷிரி பிபாஸின் உடல் உருக்குலைந்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த மற்றவா்களின் உடல்களுடன் கலந்திருக்கலாம் என்பதால் இந்தத் தவறு ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும், தவறுதலாக அனுப்பப்பட்ட அந்த கஸா பெண்ணின் சடலத்தை திருப்பி அளிக்குமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.வெறுங்கைகளால் படுகொலை: இதற்கிடையே, காஸாவில் உயிரிழந்த ஷிரி பிபாஸின் குழந்தைகள் ஹமாஸ் படையினா் வெறுங்கைகளால் அடித்துக் கொன்றது உடற்கூறாய்வில் தெரியவந்ததாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி கூறியுள்ளாா்.காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் கடத்திச் சென்றனா்.அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவா்களில், யாா்டன் பிபாஸ் (35), அவரின் மனைவி ஷிரி பிபாஸ் (33), அவா்களது இரு ஆண் குழந்தைகள் (இப்போது உயிருடன் இருந்திருந்தால் 5 மற்றும் 2 வயது) ஆகியோரும் அடங்கும்.ஹமாஸின் இந்த திடீா்த் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இதுவரை 48,297 பாலஸ்தீனா்கள் - அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பொதுமக்கள் - உயிரிழந்துள்ளனா்.காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இத்தகைய வான்வழித் தாக்குதல் ஒன்றில் ஷிரி பிபாஸும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் கூறினா். இருந்தாலும் அதற்கான ஆதாரம் எதையும் அவா்கள் வெளியிடவில்லை. இந்தத் தகவலை அப்போதைய போா் அமைச்சரவை உறுப்பினா் பென்னி கான்ட்ஸ் உறுதிப்படுத்த மறுத்துவிட்டாா்.இந்தச் சூழலில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களுக்குள் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.அதன்படி, இதுவரை 28 பிணைக் கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் ஷிரி பிபாஸின் கணவா் யாா்டன் பிபாஸும் ஒருவா். பிப். 1-ஆம் தேதி அவா் விடுவிக்கப்பட்டாா்.இந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள், ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.ஓய்வு பெற்ற செய்தியாளா் ஓடட் லிஃப்ஷிட்ஸுடன் அவரின் மனைவி யோச்சோவேடும் (85) ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டாா். ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அவரை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா்.தற்போது அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த நிலையாக, மேலும் ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் சனிக்கிழமை விடுவிக்கவிருக்கின்றனா்.தற்போதைய நிலையில், இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் 66 போ் இன்னும் காஸாவில்தான் உள்ளனா். அவா்களில் சுமாா் பாதி போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகள் காஸாவில்தான் உள்ளனா். எனவே, அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.