உக்ரைனில் அமைதி நிலவ பதவி விலகவும் தயாா்: அதிபா் ஸெலென்ஸ்கி
உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சோ்க்கப்படுமானால் அதிபா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், கனடா என 32 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பதே தனது நோக்கம் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், இதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷியா, உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடுத்தது. இந்தப் போா் தொடங்கி திங்கள்கிழமையுடன் (பிப்.24) 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் ரஷியாவும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் அதிபா் ஸெலென்ஸ்கி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
உக்ரைனில் நீடித்து நிலைக்கும் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சோ்க்கப்படுமானால் அதிபா் பதவியை நான் ராஜிநாமா செய்யத் தயாா் என்றாா்.
உக்ரைனில் போா் காரணமாக ராணுவச் சட்டம் அமலில் உள்ளது. அந்நாட்டில் தோ்தல் நடத்த அச்சட்டம் தடை விதிக்கிறது. எனினும் அந்நாட்டில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் அண்மையில் யோசனை தெரிவித்தனா். இந்தச் சூழலில், தான் அதிபா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.