பாகிஸ்தானில் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்த நடிகையின் உடலை, அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சின்ன திரை நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (வயது 32), கராச்சி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், அந்நாட்டின் ஏராளமான சின்ன திரை நாடகங்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரது வீட்டை காலி செய்ய காவல் துறையினர் சென்றபோது அங்கு ஹுமைராவின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இருப்பினும், ஹுமைராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகப்படும்படியான எந்தவொரு தடயமும் கிடைக்காததினால், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், ஹுமைரா மரணமடைந்து குறைந்தது 2 மாதங்களுக்கு மேலாகியிருக்கக் கூடும் எனக் கருதப்படும் நிலையில், அவர் இல்லாததை அக்கம்பக்கத்தினர் உள்பட யாரும் உணரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஹுமைராவின் உடலில் ரசாயன கூராய்வு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் அவர்களைத் தொடர்புக்கொண்டனர்.
அப்போது, அவர்கள் அவரது உடலை உரிமைக்கோர மறுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஹுமைராவுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது உடலை சிந்து மாகாண அரசு முறையாக அடக்கம் செய்யும் என அம்மாகாணத்தின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுல்ஃபிகார் ஷா தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த ஜூன் மாதம், கராச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆயிஷா கான் (84) எனும் நடிகையின் உடல், அவர் இறந்து பல நாள்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, பாகிஸ்தானில் பொழுதுப்போக்குத் துறையில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினராலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு தனியாக தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆர்வலர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.