அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.
உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் ‘கிஸ் கேம்’ என்றழைக்கப்படும் கேமரா வைக்கப்படும் நிகழ்வு மேற்கத்திய நாடுகளில் வழக்கமானது.
இதன் மூலம் போட்டியின் போது நெருக்கமாக இருக்கும் ஜோடிகளை, இந்த கேமராவில் படம்பிடித்து பெரிய திரையில் காட்டுவார்கள். அதைப் பார்க்கும் அரங்கில் கூடியிருக்கும் பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்துவர்.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் மாசாஸுசெட் மாகாணத்தில் பாஸ்டனுக்கு அருகில் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற்ற கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் நெருக்கமாக இருந்த விடியோ, அரங்கில் கூடியிருந்தவர் முன்னிலையில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டு, இருவருக்கும் தவறான உறவு இருப்பதாகக் கூறி மிகப்பெரிய சர்ச்சையானது. இதனால், இருவரும் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜிநாமா செய்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு மத்தியில் மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானம் கோல்டு பிளே நிகழ்ச்சியில் புதிய கிஸ் கேம் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
அந்த விடியோவில் ஆர்ஜென்டீனா அணியின் கேப்டனும், கால்பந்து ஜாம்பவானுமான மெஸ்ஸி தன்னுடைய மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோவுடன் பங்கேற்றிருந்தார்.
அப்போது ஒலிபெருக்கியில், “எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்” என வர்ணனையாளர் கூறியதும், மெஸ்ஸி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அந்த அரங்கமே மெஸ்ஸி.. மெஸ்ஸி... என்ற கோஷத்தால் அதிர்ந்தது.
நிகழ்ச்சியின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த கிஸ் கேம்மில் அவரின் விடியோ திரையிடப்பட்டதால், அங்கு குழுமியிருந்த கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸி.. மெஸ்ஸி.. எனக் கூச்சலிட்டு இசை நிகழ்ச்சியை கால்பந்து திடலாக மாற்றி உற்சாகமடைந்தனர்.
எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த விடியோ 1.20 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், சிலர் “இந்த முறை மெஸ்ஸி மறைந்து கொள்ளவில்லை” என்றும், “ஆஸ்ட்ரோனோமர் அதிகாரி போல அந்த நிகழ்ச்சியை மறு உருவாக்கம் செய்யுங்கள்” என்றும், “தலைப்பை படிக்கும் முன்னர் மெஸ்ஸியும் மாட்டிக்கொண்டார் என்றே நினைத்தேன்” என்றும் தங்களை கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.