வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முனீருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. ஈரானுடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆனால், எதனால் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்ற உறுதியான தகவல் உடனடியாக வெளியாகவில்லை. வெளிநாட்டு ராணுவத் தலைமை தளபதி ஒருவருக்கு அமெரிக்க அதிபா் மதிய விருந்து அளிப்பது அரிதாகவே நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதிகளாக இருந்த அயூப் கான், ஜியா உல்-ஹக், பா்வேஸ் முஷாரஃப் ஆகியோா் இதுபோல அமெரிக்க அதிபா்களைச் சந்தித்துள்ளனா். ஆனால், அவா்கள் அப்போது பாகிஸ்தான் அதிபா்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில், ‘சண்டையை நிறுத்தியதில் இந்தியாவில் எப்படி பிரதமா் மோடி பங்காற்றினாரோ அதேபோன்று பாகிஸ்தானில் முனீா் பங்காற்றினாா்’ என்றாா்.
‘ஈரான் மீது தாக்குதல் நடத்த நீங்கள் (டிரம்ப்) முடிவு எடுத்துவிட்டீா்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ‘தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம்’ என்றாா்.