படம் | பி.ஒய்.டி. பதிவு
உலகம்

மின்சார வாகன விற்பனையில் டெஸ்லாவை ஓரங்கட்டியுள்ள சீன நிறுவனம்!

எலான் மஸ்க்கின் டெஸ்லாவை விற்பனையில் விஞ்சிய சீன நிறுவனம் - ‘பி.ஒய்.டி’..

DIN

மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’. 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி சாதனை புரிந்துள்ளது பி.ஒய்.டி.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அரசு நிா்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவால் தயாரிக்கப்படும் காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. இதனிடையே, டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’ உருவெடுத்திருப்பதுடன் உலக அரங்கில் மாபெரும் மின்சார வாகன சந்திகளில் ஒன்றாக திகழும் சீனாவில் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி நிறுவனத்தின் பெயர் விரிவாக்கம் சுவாரசியமானது. “பில்ட் யுவர் ட்ரீம்ஸ்” என்பதன் சுருக்கமே ‘பி.ஒய்.டி’ பெயராகும்.

இந்த நிலையில், உலகளவில் கோலோச்சி வரும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவுக்கு கடும் தொழில் போட்டியளித்துள்ள பி.ஒய்.டி. நிறுவனம், முந்தைய ஆண்டைவிட 29 சதவிகிதம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இதன்மூலம், ப்ளூம்பெர்க் கணித்திருந்த 750 பில்லியன் யுவான் என்ற வருவாயைவிட கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

பி.ஒய்.டி. நிறுவனத்தின் கடந்தாண்டு நிகர லாபம் 40.3 பில்லியன் யுவான். இது அதற்கு முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட 34 சதவிகிதம் அதிகமாகும்.

அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்துள்ளதன்படி, சுமார் 4.30 மில்லியன் வாகனங்களை கடந்தாண்டு விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டு(2023) விற்பனையைவிட 40 சதவிகிதம் அதிகமாகும்.

பிப்ரவரி மாதாந்திர விற்பனையும் 161 சதவிகிதம்(3.18 லட்சம் வாகனங்கள்) அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதே காலக்கட்டத்தில் டெஸ்லாவின் விற்பனையை ஒப்பிடும்போது, இது மிக அதிகம் என்றே சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பி.ஒய்.டி. நிறுவனத்தால் இம்மாதம் புதுமையான பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு பெட்ரோல் நிலையத்தில் நாம் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்வோமோ அதே அளவு நேரத்துக்குள்ளாக இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துவிடலாம் என்று காட்டப்பட்டிருப்பது தொழில்நுட்ப புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

SCROLL FOR NEXT