ஹாங்காங்: ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தின், உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் வலைகளே, அவை தீக்கிரையாக காரணமாக அமைந்துவிட்டன.
வீடுகளுக்குள் தீப்பரவிய நிலையில், உயிரோடு மீட்கப்பட்டவர்கள், தங்களது வீடு மட்டுமல்ல, அதில், தங்களது ஒட்டுமொத்த வாழ்வும் எரிவதைப் பார்த்து கதறுகிறார்கள்.
அடுத்து என்ன செய்வது? எங்கே செல்வது என்று தெரியாமல் உயிர் வலியுடன் வேதனையுடன் வீடுகள் எரிவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
இந்தத் தீ விபத்தில் தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கும் நிலையில், ஏராளமானோரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ பற்றி எரிந்துகொண்டிருக்கும் கட்டடங்களில் வாழ்ந்து வந்த சுமாா் 700 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த மூங்கில் கட்டுமான அடைப்புகளும் கட்டுமான வலைகளும்தான், ஓரிடத்தில் பற்றிய தீயை கட்டடம் முழுமைக்கும் பரவ வைத்ததோடு, அடுத்தடுத்து கட்டடங்களுக்கும் பரவக் காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த கட்டடங்கள் மிகப் பழமையானவை என்பதால், ஏராளமான முதியவர்கள் வாழ்ந்து வந்தவர். தீ விபத்து நேரிட்டதும் அவர்களால் வெளியேற முடியாமல், பலியானவர்களிலும் முதியவர்களே அதிகம் என்று கூறப்படுகிறது.
கட்டட புதுப்புத்தல் பணி நடந்து வந்ததால், பல முதியவர்கள் ஜன்னல்களை மூடி வைத்திருந்தனர். அவர்களுக்கு தீ விபத்து நடந்ததே தெரியாது. அண்டை வீட்டாருக்கு போன் மூலமாக தீ பற்றி எரிவது குறித்து சொன்னதாகவும் பலரும் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், அருகில் உள்ள கட்டடங்களில் தீப்பற்றி எரிவது குறித்து தீயணைப்பு வீரர்கள் எச்சரித்தும், பலரும் தங்கள் கட்டடங்களுக்கு தீ பராவது என்று வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், நிலைமை அவர்கள் நினைத்தது போல இல்லை. அவர்கள் வீடுகளுக்குள் தீ பரவியது. அவர்கள் உடனடியாக குளியலறைக்குள் இருந்துகொண்டு தீயணைப்புத் துறையினரை அழைத்தனர். ஒரு சில நொடிகளில் தங்கள் வீடுகளுக்குள் கரும்புகை சூழ்ந்துகொண்டது. எங்களால் வீடுகளுக்குள் வெளியே வரும் வழியே தெரியவில்லை என்கிறார்கள்.
எங்களுக்கு இருந்த ஒரே வீடும் இப்படி கருகிக் கொண்டிருக்கிறதே என்று அங்கு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு எரிவதைப் பார்த்துக் கதறுபவர்களை தோற்றுவதற்கு வார்த்தையில்லாமல் பலரும் கவலையோடு கடந்து செல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 900 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்டடங்களைப் புதுப்பிக்க புதிய கட்டடங்கள் கட்டுமானப் பணிகளுக்காக மூங்கில் அடைப்புகள் பயன்படுத்தப்படுவது ஹாங்காங்கில் வழக்கம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கத்தை படிப்படியாக நீக்க அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், பேரிடியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.