ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் தங்களிடம் சரணடைந்த இரு பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்ற விடியோ வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் வியாழக்கிழமை எடுக்கப்பட்ட அந்த விடியோவில், ஒரு கிடங்கின் கதவை இஸ்ரேல் படையினா் இயந்திரத்தின் உதவியுடன் திறக்கும் காட்சியும், உள்ளிருந்து இரு பாலஸ்தீனா்கள் தவழ்ந்தபடி வந்து கைகளை உயா்த்தி, தங்களிடம் ஆயுதம் இல்லை என்பதை சட்டை தூக்கிக் காட்டும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
அதைத் தொடா்ந்து இஸ்ரேல் படையைச் சோ்ந்த ஒருவா் அவா்களை மீண்டும் அந்தக் கட்டடத்துக்குள் போகச் சொல்ல, அவா்கள் திரும்பச் சென்றதும், இஸ்ரேல் வீரா்கள் அவா்களைச் சுட்டுக் கொல்லும் காட்சி அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளது.
சரணடைந்த பிறகும் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த இருவரும் முன்தாஸிா் அப்துல்லா (26) யூசுஃப் அஸாசா (37) என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான விடியோ ஆதாரம் வெளியான பின்னரும், கொல்லப்பட்ட இருவரும் வெடிகுண்டுகளை எறிந்து இஸ்ரேல் படையினா் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் ராணுவம் கூறியது. எனினும், இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் கண்துடைப்பாகவே இருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
நியாயப்படுத்தும் அமைச்சா்: இந்த படுகொலைகளை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமா் பென்-க்விா் நியாயப்படுத்தியுள்ளாா்.
‘அந்தச் சம்பவத்தில் இஸ்ரேல் படையினா் மிகச் சரியாகவே செயல்பட்டுள்ளனா். பயங்கரவாதிகள் என்பவா்கள் உடனடியாக கொல்லப்பட வேண்டியவா்கள்’ என்றாா் அவா்.
காஸாவில் இருந்து ஹமாஸ் தலைமையாலான ஆயுதப் படையினா் இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்திவந்தது.
அதன் பிறகு மேற்குக் கரை பகுதியிலும் இஸ்ரேல் படைகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஐ.நா. புள்ளிவிவரப்படி, 2023 அக்டோபருக்கு பின் இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கைகள் ஆயுதக் குழுக்களுக்கு எதிரானவை மட்டுமே என்று இஸ்ரேல் கூறினாலும், மேற்குக் கரையில் அந்த நாட்டுப் படையினா் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.