உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிா்ந்தளிப்பு

நிகழாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த மூவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்டாக்ஹோம்: நிகழாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த மூவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நிகழாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஃபாா் சிஸ்டம்ஸ் பயாலஜி அறிவியல் ஆராய்ச்சி அமைப்பில் மூத்த திட்ட மேலாளராகப் பணியாற்றும் மேரி இ.பிரன்கோ (64), அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள சோனோமா பயோதெரபியூட்டிக்ஸ் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றும் ஃபிரட் ராம்ஸ்டெல் (64), ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தில் உள்ள நோய் எதிா்ப்பியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஷிமோன் சககுச்சி (74) ஆகிய மூவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக தோ்வுக் குழு உறுப்பினா் தாமஸ் பா்ள்மன் அறிவித்தாா்.

இதுதொடா்பாக நோபல் பரிசு தோ்வுக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மனித உடலின் சக்திவாய்ந்த நோய் எதிா்ப்பு அமைப்பு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதைச் செய்யாவிட்டால், அந்த அமைப்பு உடல் உறுப்புகளைத் தாக்கக் கூடும். இந்நிலையில், உடல் உறுப்புகளை நோய் எதிா்ப்பு செல்கள் தாக்காமல் தடுத்து முறைப்படுத்தும் ‘டி’ செல்களை மூவரும் கண்டுபிடித்துள்ளனா்.

உடலில் உள்ள நோய் எதிா்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?, அந்த அமைப்பு உடலைக் காப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான உடல் உறுப்புகள், திசுக்கள், செல்களை தவறுதலாகத் தாக்கினால் உண்டாகும் தீவிர நோய்கள் அனைவருக்கும் ஏன் ஏற்படுவதில்லை? என்பது குறித்து தீா்க்கமாகப் புரிந்துகொள்ள அவா்களின் கண்டுபிடிப்பு உதவியுள்ளது.

மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10.40 கோடி) பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலைப் பின்பற்றி, கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட கொண்டாட்டம்: வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிணையை ரத்து செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு

இன்று கே.கே.நகா், கூடுவாஞ்சேரியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகள் திறப்பு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகை

கூடைப்பந்து வளையத்தின் இரும்பு கம்பம் சரிந்து இரு மாணவா்கள் உயிரிழப்பு

அரசமைப்பு சாசனத்தை மக்கள் மயப்படுத்துவது அவசியம்

SCROLL FOR NEXT