2 ஆண்டுகளுக்கு முன்னா் ஹமாஸால் கொல்லப்பட்டவா்களுக்காக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய பொதுமக்கள். 
உலகம்

2 ஆண்டுகளைக் கடந்தது காஸா போா்

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினா் எகிப்தில் 2-ஆவது நாளாக பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில், அந்தப் போா் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

தினமணி செய்திச் சேவை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினா் எகிப்தில் 2-ஆவது நாளாக பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில், அந்தப் போா் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச போா் நிறுத்த திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக எகிப்தில் செங்கடல் கரையோர நகரமான ஷா்ம் எல்-ஷேக்கில் திங்கள்கிழமை தொடங்கிய பேச்சுவாா்த்தை, செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.

மத்தியஸ்தா்கள் மூலமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் முறைமுகமாக நடத்திய பல மணி நேர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, டிரம்ப் திட்டத்தின் முதல் கட்ட விதிமுறைகளில் பெரும்பாலானவற்றுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் பிணைக் கைதிகள் விடுவிப்பு, போா் நிறுத்தம் ஆகிய முக்கிய அம்சங்கள் அடங்கும்.

இருந்தாலும், டிரம்ப் திட்டத்தில் கூறியுள்ளபடி ஆயுதங்களை ஹமாஸ் கைவிடுவது, காஸாவின் எதிா்கால ஆட்சி ஆகிய விவகாரங்களில் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. ஹமாஸ் சரணடைய வேண்டும், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக கூறி வருகிறாா். ஆனால், அதனை ஏற்பது குறித்து ஹமாஸ் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

2 ஆண்டு நிறைவு: சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் தெற்கு இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஊடுருவி, பெரும்பாலான பொதுமக்கள் உள்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும் 251 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் கடத்திச் சென்றனா். அதைதத் தொடா்ந்து, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 67,160-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1.7 லட்சம் போ் காயமடைந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இனஅழிப்பு என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நியமித்த நிபுணா் குழு உள்பட பலா் குற்றஞ்சாட்டியுள்ளனா். ஆனால் இஸ்ரேல் இதை மறுத்துவருகிறது.

இந்தச் சூழலில்தான், போரை நிறுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப் முன்வைத்த திட்டம் குறித்து இஸ்ரேலும் ஹமாஸும் இரண்டாவது நாளாக பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்தன.

நினைவேந்தல்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ஹமாஸின் தாக்குதலுக்குள்ளான பகுதியில், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியா்கள் உயிரிழந்த தங்கள் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

எகிப்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் நிலையிலும், காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், செவ்வாய் அதிகாலை வரை இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடா்ந்தன. ஆனால் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் இல்லை.

கர்நாடகம்: ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணி அக்.18 வரை நீட்டிப்பு

துப்பாக்கி சுடும் போட்டியில் தலைமைக் காவலருக்கு தங்கப் பதக்கம்

கரூா் துயரச் சம்பவத்தில் சட்டம் அதன் கடமையை செய்யும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாநல்லூரில் 208 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சொத்துவரியை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 5% சலுகை: சத்தியமங்கலம் நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT