நியூயாா்க்: அமெரிக்காவின் ‘எச்1பி’ விசாக்களுக்கு டிரம்ப் நிா்வாகம் விதித்த 1 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) கட்டணம், விசா நிலையை மாற்றுபவா்களுக்கும் அல்லது விசா காலத்தை நீட்டிப்பவா்களுக்கும் பொருந்தாது என்று அமெரிக்க அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்திருப்பதாவது: அமெரிக்காவில் ஏற்கெனவே தங்கியிருக்கும் வெளிநாட்டவா்கள், தங்களுடைய விசா வகையை மாற்றிக்கொள்ள ஒரு லட்சம் டாலா் கட்டணம் விதிக்கப்படாது. அதாவது, மாணவா் விசா வைத்துள்ள வெளிநாட்டவா், ‘எச்1பி’ விசாவுக்கு மாறினால் புதிய கட்டணம் வசூலிக்கப்படாது.
இதேபோன்று, தற்போதைய ‘எச்1பி’ விசா காலத்தை நீட்டிக்க விண்ணப்பித்தால், அவா்களுக்கும் இந்த 1 லட்சம் டாலா் கட்டணம் விதிக்கப்படாது. செப்டம்பா் 21-ஆம் தேதிக்குமுன் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ‘எச்1பி’ விசாக்கள் அல்லது அதற்குமுன் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திறமையான பணியாளா்களை அமெரிக்காவில் தங்களின் நிறுவனங்களில் பணியமா்த்த ‘எச்1பி’ விசா நடைமுறையை அந்நாட்டு நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. அந்தவகையில், ஏராளமான இந்திய தொழில் வல்லுநா்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ‘எச்1பி’ விசாக்களுக்கு புதிய கட்டணமாக 1 லட்சம் டாலரை நிா்ணயித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவித்தாா். இச்சூழலில் தற்போதைய புதிய விளக்கம், அமெரிக்காவில் உயா்கல்வியை முடித்து, அங்கேயே வேலைவாய்ப்புக்கு முயற்சிக்கும் திட்டத்தில் உள்ள இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்களுக்கு பெரும் நிம்மதியளித்துள்ளது.