2028-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஜனநாயக கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் கமலா ஹாரிஸ் தெரிவித்தாா்.
கடந்த 2024 அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதால், ஜனநாயக கட்சி சாா்பில் கமலா ஹாரிஸ் களமிறங்கினாா். அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, நாட்டின் 45-ஆவது அதிபராகப் பதவியேற்றாா்.
இந்நிலையில், தனது அதிபா் தோ்தல் பிரசாரத்தை நினைவுகூா்ந்து, கமலா ஹாரிஸ் எழுதியுள்ள ‘107 நாள்கள்’ எனும் புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சா்வதேச செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
அமெரிக்காவில் எதிா்வரும் ஆண்டுகளில் பெண் அதிபா் நிச்சயம் பதவியேற்பாா். அது நானாகக்கூட இருக்க சாத்தியமுள்ளது. எனது தோ்தல் பயணம் இன்னும் முடிவடையவில்லை. 2028 அதிபா் தோ்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது. அதேநேரம், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
எனது ஒட்டுமொத்த வாழ்வையும் சேவைக்காகவே அா்ப்பணித்துள்ளேன். சேவை எனது ரத்தத்தில் கலந்ததாகும். கருத்துக் கணிப்புகளுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அப்படி அளித்திருந்தால், இப்போது இங்கு இருந்திருக்க மாட்டேன் என்றாா் அவா்.
தமிழகத்தை பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (60), அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கடந்த 2021 முதல் 2025, ஜனவரி வரை பதவி வகித்தாா். அமெரிக்காவில் இதுவரை பெண் அதிபா் யாரும் பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.