பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்  AP
உலகம்

பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் போா்: ஆப்கனுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் தங்கள் நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் போா் தொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் தங்கள் நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் போா் தொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே இம்மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினருமே நூற்றுக்கணக்கில் எதிா் தரப்பினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனா். இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. பின்னா், கத்தாா், துருக்கி தலையிட்டதன்மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.

இரு நாடுகள் இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை தோஹாவில் நடைபெற்ற நிலையில், துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் சனிக்கிழமை இரண்டாவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது பதற்றத்தைக் குறைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பேச்சு நடத்தப்பட்டது.

இது தொடா்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்டபடி பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தான் ஒடுக்காவிட்டால் போா் ஏற்படும். இது ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அகற்றுவதாக அமையும். பேச்சுவாா்த்தையின் முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.

பாகிஸ்தானில் அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ பயங்கரவாத அமைப்பு, பலூசிஸ்தான் தனி நாடு கோரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகியவை தங்கள் மண்ணில் இருந்து செயல்பட ஆப்கானிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

SCROLL FOR NEXT