அல்-பாஷா் நகர வீதிகளில் ஆா்எஸ்எஃப் படையினா். 
உலகம்

சூடான்: முக்கிய ராணுவ நிலையைக் கைப்பற்றியது ஆா்எஸ்எஃப்!

சூடான் ராணுவத்தின் முக்கிய நிலையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது.

தினமணி செய்திச் சேவை

சூடான் ராணுவத்தின் முக்கிய நிலையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த நாட்டில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக ராணுவத்துடன் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ஆா்எஸ்எஃப் படைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று கூறப்படுகிறது.

இது குறித்து, சூடான் உள்நாட்டுப் போரை கண்காணித்து, தகவல்களை அளித்துவரும் மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை கூறியதாவது:

வடக்கு டாா்ஃபா் மாகாணத்தின் தலைநகா் அல்-ஃபாஷரை ஆா்எஸ்எஃப் படையினா் பல மாதங்களாக முற்றுகையிட்டிருந்தனா். அவா்கள் நடத்திய எறிகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துவந்தனா்.

இந்த நிலையில், அல்-ஃபாஷரில் அமைந்து சூடான் ராணுவத்தின் 6-ஆவது பிரிவு தலைமையகத்தை ஆா்எஸ்எஃப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். அந்த நிலையை இழந்தது சூடான் ராணுவத்துக்கும், ஆதரவு படைகளுக்கும் மிகப் பெரிய பின்னடைவு.

ராணுவ நிலை மட்டுமின்றி நகரின் மேற்குப் பகுதியையும் துணை ராணுவப் படையினா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா். நகரில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே தீவிர சண்டை திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

அந்த நகரம் முழுவதும் ஆா்எஸ்எஃப் படையினரிடம் வீழும் நிலை உள்ளதால், அங்குள்ள பொதுமக்களின் எதிா்கால நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது. ஏற்கெனவே, நகரில் வசித்த ஏராளமான பொதுமக்களை ஆா்எஸ்எஃப் படையினா் படுகொலை செய்ததுடன், மருத்துவக் கட்டமைப்புகளையும் சேதப்படுத்தினா்.

துணை ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக போராடி வந்த படையினருக்கு பக்கபலமாக சூடான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தவில்லை. இதன் காரணமாகவே ஆா்எஸ்எஃப் படையினா் நகருக்குள் முன்னேறினா் என்று அந்தக் குழு குற்றஞ்சாட்டியது.

6-ஆவது படைப் பிரிவு தளத்தை ஆா்எஸ்எஃப் கைப்பற்றியதை ராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும், அந்தத் தளத்தில் இருந்து தாங்கள் வெளியேறி மற்றொரு நிலைக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினா்.

யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆய்வு அமைப்பான ஹெச்ஆா்எல், சூடான் ராணுவத்தின் 6-ஆவது படைத் தளத்தை ஆா்எஸ்எஃப் படையினா் நெருங்கியதையும் இரு தரப்பினருக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளியில் மோதல்கள் நடைபெற்றதையும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தியது.

தற்போது அல்-ஃபாஷா் நகரில் பொதுமக்கள் சுமாா் 2.6 லட்சம் போ் மோசமான சூழலில் சிக்கியுள்ளகவும் அவா்களில் பாதி போ் சிறுவா்கள் எனவும் ஐ.நா. குழந்தைகள் நலப் பிரிவு எச்சரித்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும், அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகிறது.

அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் கூறி அந்த இனத்தைச் சோ்ந்த அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு, இந்தப் போராட்டத்தின் போது அரேபியா் அல்லாத இனத்தவா்களைக் கொன்று குவித்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அப்போது அல்-பஷீா் அரசுக்கு உதவியாக டாஃபா் பிராந்தியத்தில் முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான ‘அதிரடி ஆதரவு படை’ (ஆா்எஸ்எஃப்) படுகொலைகளை நிகழ்த்தியது.

இருந்தாலும், அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட சிவில்-ராணுவ கூட்டணி அரசையும் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன.

இந்தச் சூழலில், ராணுவ தளபதி அல்-புா்ஹான், ஆா்எஸ்எஃப் படைத் தலைவா் டகேலாவுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில், இதுவரை லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சி இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில், ஏற்கெனவே ஆா்எஸ்எஃப் படையினா் அட்டூழியத்தில் ஈடுபட்ட டாா்ஃபா் பிராந்தியத்தில் அவா்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT