அமெரிக்க அமைச்சரவை கொண்டு வந்திருக்கும் அவுட்சோர்சிங் வரன்முறை (ஹையர்) என்ற சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்களது சேவைகளை வெளிநாடுகளுக்குக் கொடுக்கும்போது, அவற்றுக்கு செலவிடும் தொகைக்கு 25 சதவீதத்தை வரியாக செலுத்துவதற்கு இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
ஹால்டிங் இன்டர்நேஷனல் ரிலோகேஷன் ஆஃப் எம்ப்லாய்மென்ட் (HIRE) என்பதே ஹையர் சட்ட மசோதா. இந்த மசோதாவின்படி, ஒரு அமெரிக்க நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு சேவைகளுக்காக செலவழிக்கும் தொகையில் 25 சதவீதம் வரியை அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டும். இதனை ஃபெடரல் வரியிலிருந்து கழிக்க முடியாது. இதனை கூடுதலாகவே செலுத்த வேண்டி வரும். இந்த வரித் தொகை நேரடியாக புதிய உள்நாட்டு தொழிலாளர் நிதிக்கு செல்லும்.
இந்த சட்டத் திருத்தம் அமரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மையம், பின்னணியில் செயல்படும் அலுவலகம், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளுக்கும் பொருந்தும்.
அமெரிக்க இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், அதனை முடிவுக்குக் கொண்டு வரவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நல்ல சம்பளம் பெறும் வேலைகளை, பல காலமாக அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குக் கொடுத்து வருகின்றன. அது நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதன் மூலம், அமெரிக்க நிறுவனங்களிள் அவுட்சோர்சிங் பணிகளுக்கு செய்யும் செல்வு அதிகரிக்கும். எனவே, அதனை அமெரிக்காவுக்கே மாற்றும் வாய்ப்பு அதிகரிக்கும். அமெரிக்காவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதே, இந்த மசோதாவின் நோக்கம்.
அவ்வாறு மாற்றாவிட்டாலும், அமெரிக்க நிறுவனங்கள் செலுத்தும் வரித் தொகையை வைத்து இளைஞர்களுக்கு பணிப் பயிற்சி அளிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்தலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகளால், அமெரிக்க நிறுவனங்கள், மொத்த சேவைகளில் 3 சதவீத பணியைத்தான் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன. அதில், இந்தியா, சீனா முன்னணியில் உள்ளன.
இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்த அவுட்சோர்சிங் பணி மூலமாக விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 50 சதவீத வருவாயை பெறுகின்றன. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒன்று, இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறையும் அல்லது வேலை பறிபோகும் ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருந்தாலும், ஒருவேளை நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறினால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பெரிய அளவில் சிக்கலை சந்திக்கும் அபாயம் ஏற்படலாம் என்கிறார்கள்.
ஜூலை மாதம் வாஷிங்டனில் நடந்த செய்யறிவு மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலை அமைத்து, இந்திய பணியாளர்களை நியமித்து லாபத்தை அயர்லாந்தில் முதலீடு செய்கிறது. இது அமெரிக்க குடிமக்களுக்கு நடக்கும் அநீதி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு முடிவு கட்டவே இந்த சட்ட மசோதா உருவாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.